பிரேத பரிசோதனையை காண சென்னை மருத்துவமனை புதிய கட்டிடம்

Mortuaries in government hospitals chennai: New Building for Mortuaries in government hospitals chennai for Medical Students to witness the autopsy.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்வதை மருத்துவ மாணவர்கள் நேரில் பார்க்க அரங்கம்  கட்டப்படுகிறது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனை அந்தஸ்தை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பெற்று திகழ்கிறது. சென்னை மருத்துவக்கல்லூரிக்கு தனி சிறப்பும், பெருமையும் உள்ளன. தமிழகத்தின் கடைகோடி பகுதியில் இருந்தும் சிகிச்சை பெற சென்னை அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதனால் இரவு-பகலாக இந்த மருத்துவமனை பரபரப்பாக இயங்குகிறது.

நோய்வாய்ப்பட்டு இறப்பவர்கள், விபத்து, கொலை, தற்கொலை, சந்தேக மரணம் போன்றவற்றால் உயிர் இழக்கின்றவர்களின் உடல்கள் மருத்துவக்கல்லூரி பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது. இது தவிர அடையாளம் தெரியாத, உறவினர் அல்லாத யாரும் உடலை கேட்க வராத பிரேதங்களும் இங்கு பதப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாட்கள் வரை பாதுகாக்கப்படுகின்றன. 200 பிணங்கள் வைக்க கூடிய வசதி கொண்ட ஒரே மருத்துவமனை சென்னை அரசு மருத்துவமனையாகும்.

தற்போது இட நெருக்கடியால் கூடுதலாக பிணங்கள் வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகரிக்க உள்ளது. அதனால் இந்திய மருத்துவ கழகம் விதிமுறைகளின் படி நவீன பிணவறை கட்ட முடிவு செய்யப்பட்டது. மருத்துவக்கல்லூரியில் உள்ள உடல் கூறியியல் துறை அருகில் புதிய பிணவறை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டிடமும், ரூ.75 லட்சம் செலவில் உபகரணங்களும் வாங்கப்படுகின்றன.

இந்த புதிய பிணவறை கட்டுவதன் மூலம் கூடுதலாக 60 பிணங்கள் குளிர் சாதனத்தில் வைத்து பாதுகாக் கலாம். மேலும் இந்த நவீன பிணவறையில் மருத்துவ மாணவர்கள் பிரேத பரிசோதனையை நேரில் பார்க்க அரங்கம்  அமைக்கப்படுகிறது.

250 மாணவர்கள் கேலரியில் அமரவும் அதன் நடுவில் பிணத்தின் உடல் பகுதியை அறுத்து டாக்டர் பிரேத பரிசோதனை செய்வதை மாணவர்கள் நேரில் பார்க்க கூடிய வகையில் இந்த கேலரி அமைக்கப்படுகிறது என்று சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் கனகசபை தெரிவித்தார்.

Mortuaries in government hospitals chennai: New Building constructed Medical Students to witness the autopsy

Related posts