சென்னை: பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, இன்று காலை முதல் சென்னையில் பேருந்துகள் ஓடத் துவங்கின.
கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து சேவை சுமார் 160 நாள்களுக்குப் பின்னர் இன்று காலை ஓட துவங்கியது. முதல் நாள் என்பதால் கூட்ட நெரிசலை காண முடியவில்லை.
சென்னையின் சில முக்கியப் பேருந்து நிலையங்களைப் பொறுத்தவரை இரயிலில் இருந்து வரும் பயணிகள் தங்களது பணியிடங்களுக்குச் செல்ல பேருந்துகளை நாடுவர். தற்போது இரயில் சேவை இயக்கப்படாததாலும், பல தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாலும், முதல் நாளான இன்று பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை என்றும் கருதப்படுகிறது.
தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமாா் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 மாதங்களுக்கு முன் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில், ஒருசேர தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதியளித்து, முதல்வா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்ததாா்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பேட்டரிகள், எரிபொருள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டு, பேருந்துகள் இயக்க தயாா் நிலையில் வைக்கப்பட்டன.
எஸ்.இ.டி.சி இயங்காது: பொது முடக்கத்துக்கு முன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ், சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்குப் பேருந்துகளை இயக்க அனுமதி இல்லாததால், விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்காது. ஏற்கெனவே அறிவித்தபடி, ஒப்பந்த அடிப்படையில், தனியாா் நிறுவனப் பணியாளா்களுக்குப் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படும்.
கட்டணத்தில் மாற்றமில்லை… அனைத்துப் பேருந்துகளிலும் 50 சதவீதப் பயணிகளே அனுமதிக்கப்பட்ட போதிலும், பயணக் கட்டணத்தில் எந்த வித மாற்றமுமில்லை. எனவே, அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.