ipl gambling final day 2,500 crores
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் இறுதிப் போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட முன்னாள் வீரர்கள், தரகர்கள் என ஏராளமானோரை கைது செய்துள்ளனர். இது தவிர மும்பை காவல்துறையினர் மற்றும் பல்வேறு மாநில காவல்துறையினர் ஆங்காங்கே சூதாட்ட தரகர்களை கைது செய்து வருகின்றனர். இத்தனை பரபரப்புக்கும் இடையில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியிலும் சூதாட்ட பந்தயம் நடந்துள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் மட்டும் ரூ .2,500 கோடிக்கு சூதாட்ட பந்தயம் (பெட்டிங்) நடந்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் சில முன்னணி சூதாட்ட தரகர்கள் காவல்துறையினர் நடவடிக்கைகளுக்கு பயந்து சூதாட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் பல தரகர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர். டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற மாநிலங்களில் கிரிக்கெட் சூதாட்ட பந்தயம் என்பது மிக சாதாரண விஷயம். இறுதிப்போட்டி தொடங்கியதும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக பந்தயம் தொடங்கியது.
அப்போது, மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால், அதன் மீது ஒரு ரூபாய் பந்தயம் கட்டுபவருக்கு ஒரு ரூபாய் 75 காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல் விக்கெட் விழுந்ததும், சென்னை சூப்பர் கிங்சுக்கு ஆதரவாக பந்தயம் கட்டப்பட்டது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றால், ஒரு ரூபாய்க்கு, ஒரு ரூபாய் 85 காசு வழங்கப்படும் என்ற அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் இரண்டாவது விக்கெட்டை இழந்ததும், அந்த அணியின் மீதான பரிசு 60 காசாகவும், மூன்றாவது விக்கெட்டை இழந்ததும் பரிசு, 40 காசாகவும் குறைக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தொடங்கிய போது அந்த அணிக்கு 75 காசு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சென்னை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், சென்னை வென்றால் 75 காசு என்றும், மும்பை வென்றால் பரிசு 36 காசு என்றும் மாற்றப்பட்டது. அப்போது பலரும் அதிக காசுக்கு ஆசைப்பட்டு சென்னை அணி மீது பணம் கட்டினார்கள். ஆனால் இறுதியில் மும்பை அணி வென்றதால் சென்னை அணி மீது பணம் கட்டிய அனைவரும் தங்கள் பணத்தை பறிகொடுத்தனர்.
சூதாட்ட தரகர்கள் பணத்தை கோடி, கோடியாக அள்ளிவிட்டனர். சூதாட்ட பந்தயத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறும்போது, ‘‘நாங்கள் பந்தயம் கட்டுவதால் வேறு சிலர் லாபம் சம்பாதிக்கிறார்கள், மிகவும் முக்கியமாக தரகர்கள். இறுதிப்போட்டி தரகர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவதாக அமைந்து விட்டது’’ என்றார்.
ஒரு வழியாக 45 நாட்களாக நடந்து வந்த 6–வது ஐ.பி.எல். போட்டிகளுக்கான சூதாட்ட ஜுரம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் இந்த சூதாட்ட ஜுரம் மீண்டும் ஜூன் 6–ந்தேதி இந்தியா–அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியையொட்டி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.