கோல்கட்டா : செப்டம்பர் 21, 2018
மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட இருந்த கவுரவ டாக்டர் பட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்க மறுத்துவிட்டார்.
மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக 63ம் ஆண்டு பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியில் நடக்கவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது . இதை பற்றி சச்சினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க சச்சின் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது . சச்சின் டெண்டுல்கர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது தார்மீக ரீதியில் தனக்கு சரியாக படவில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் தர முன் வந்தபோதும் அதை ஏற்க சச்சின் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடதக்கது.இதனால் அந்த பட்டத்தை குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு வழங்க பல்கலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது .