மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பா.ம.க

பாமக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,.

பாமக முன்னரே அறிவித்தபடி  எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டு இல்லை, ஆதரவும் இல்லை என்பதற்கேற்ப, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார் அன்புமணி ராமதாஸ்.

தமிழ்நாட்டில் கடந்த 2011&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும்  பெருமளவில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி போட்டியிடுகின்ற சில கட்சிகள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய அனைவரும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தனித்துப் போட்டி என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நிர்வாகக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்டத்தில் காணப்பட்ட அதே உணர்வே இன்றைய செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், புறக்கணிக்க வேண்டும்  என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை ஏற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டம் ஒரு மனதாக முடிவெடுக்கிறது என்று அன்புமணி கூறினார்

 

Pattali Makkal Katch (PMK).decided to boycott the Rajya Sabha election

Related posts