சென்னையில் தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் தற்கொலை மிரட்டல்

railway staff threaten to commit suicide by jump from 7th floor of railway office building

railway staff threaten to commit suicide by jump from 7th floor of railway office building

சென்னையிலுள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து, சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக அவர் கீழே இறக்கப்பட்டார்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் பெரம்பூரில் உள்ள ரெயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ரெயில்வே சட்டதிட்டத்தின்படி தமிழரசன் வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மேலதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். ஆனால் யாரும் இவரது கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இதனால் அவர் சில தினங்களாக விரக்தியடைந்து காணப்பட்டார். 

இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் தமிழரசன் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அதிகாரிகளை சந்திக்க முயற்சித்தும் பலன் இல்லாததால் கட்டிடத்தின் 7-வது மாடிக்கு சென்றார். அவரது கையில் ஒரு சிகப்பு நிற பேக்குடன் சென்றார். அதில் இரண்டு பாட்டில்களை வைத்திருந்தார். அதில் ஒன்றில் பெட்ரோலும், மற்றொன்றில் குடிநீரும் வைத்திருந்தார். 

மாடியின் உச்சியில் பெட்ரோல் பாட்டிலுடனும், சிகரெட் லைட்டருடனும் தமிழரசன்நின்று கொண்டிருப்பதை பார்த்த பயணி ஒருவர், உடனடியாக ரெயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து மாடியின் உச்சிக்கு சென்றனர். அங்கு தமிழரசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

ஆனால் தமிழரசன் யாருடனும் பேச விரும்பவில்லை என்றார். அருகில் வந்தால் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் அல்லது தீக்குளிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் போலீசார் சற்று தொலைவில் நின்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தனக்கு மீண்டும் வேலை தர வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். தீயணைப்புத் துறையினருக்கும் தகவல்  

தெரிவிக்கப்பட்டு எஸ்பிளனேடு நிலையத்திலிருந்து 2 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் வந்தனர். தீயணைப்புத் துறையினர் ராட்சத தார்ப்பாயை கட்டிடத்தின் கீழ்பகுதியில் விரித்து உயர்த்தி பிடித்தபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு தமிழரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தார்ப்பாயை விரித்தால் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டியதால் அந்த முயற்சியை கைவிட்டனர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பூக்கடை உதவி ஆணையர் குமார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மதி தலைமையில் அங்கு வந்த போலீசாரும், ரெயில்வே கோட்ட அதிகாரிகளும் தமிழரசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘உங்களுடைய கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்படும், கீழே இறங்குங்கள்’ என்று அவர்கள் வாக்குறுதி அளித்தும் தமிழரசன் மறுத்துவிட்டார். வேலைக்கான ஆணை கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன், இல்லையெனில் கீழே குதித்துவிடுவேன் என்று உறுதியாக கூறிவிட்டார். இதனையடுத்து அவரது மனைவியை வைத்து தமிழரசனை கீழே கொண்டு வர திட்டமிட்டனர். தமிழரசனின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் தனது இரு குழந்தைகளுடன் பதறியடித்து ஓடிவந்தார். மக்கள் கூடினர், அவரது மனைவியும் தமிழரசனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் தமிழரசன் அப்போதும் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தார். நேரம் ஆக, ஆக என்ன நடக்குமோ என்ற பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டது.

தமிழரசனுக்கும்  போலீசாருக்கும் நடந்த பேச்சுவார்த்தையை வேடிக்கை பார்க்க ஏராளமான பொதுமக்களும் கூடிவிட்டனர். ரெயில்வே அலுவலக மாடியில் ரெயில்வே ஊழியர்களும் கூடினர். போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மதிய உணவுக்கு கூட செல்லாமல் அவரை காப்பாற்றும் முயற்சியில் முனைப்புடன் இருந்தனர்.

இறுதியாக போலீசார் அவரது வேலைக்கான பத்திரம் என்று கூறி ஒரு கடிதத்தை அவரிடம் காட்டினர். இதனையடுத்து மாலை 4.20 மணிக்கு (5 மணி நேரத்துக்குபின்) அவர் தனது போராட்டத்தை கைவிடுவதாக கூறினார். உடனே காவல்துறையினர் அவரை அலேக்காக தூக்கி மாடியிலிருந்து கீழே இறக்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதற்கிடையே அதிக பதட்டமடைந்த தமிழரசனின் மனைவி மயக்கமடைந்தார். உடனே அங்கேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தமிழரசனை மீட்டு சென்னை துறைமுகம் மிதக்கும் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஜெயிலில் அடைக்கப்படுவாரா? அல்லது எச்சரித்து அனுப்பப்படுவாரா? என்று விசாரணை முடிவில் தான் தெரியும் என்று வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

Railway staff threaten to commit suicide by jump from 7th floor of railway office building

Related posts