தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Tamil New Year in 2013இது குறித்து அவர்கள் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஆளுநர் கே. ரோசய்யா: தமிழ்ப் புத்தாண்டு, வைசாகி, பைசாகி மற்றும் விஷு பண்டிகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெறுப்பை அகற்றி அன்பு, இரக்கம் மற்றும் கருணை போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.
இப் புத்தாண்டில் நம்மிடையே ஒற்றுமை ஓங்கி இந்தியாவிலும், தமிழகத்திலும் அமைதியும், வளமும் கொழிக்கட்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா: தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் நாளில் உலகெங்கும் வாழும் என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தாய் மொழியாம் தமிழ், பழம்பெருமையும், இலக்கிய வளமும் நிறைந்த மொழியாகும். பன்னெடுங்காலமாக பருவங்களின் சுழற்சியையும், வான சாஸ்திர கோட்பாடுகளையும் ஆராய்ந்து சித்திரை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின்படியும் சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக உறுதி செய்ததை எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன். தமிழக மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளில் உவகை நிறைந்த உள்ளத்தோடு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும். வளம் பெருகட்டும். அன்பு நிலவட்டும் என முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஷு புத்தாண்டு: மலையாளப் புத்தாண்டான விஷு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:
மலையாள மொழி பேசும் மக்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் தங்களது பாரம்பரியப் பண்புகளை விடாது பேணிப் பின்பற்றி வருகின்றனர். விஷு பண்டிகையன்று அதிகாலையில் அரிசி, காய், கனி வகைகள், கண்ணாடி, கொன்றை மலர், தங்க நாணயங்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக்கனியை கண்டு, வரும் ஆண்டு குறைவற்ற செல்வத்தையும், அளவற்ற மகிழ்ச்சியையும், நோயற்ற வாழ்வையும் வழங்க வேண்டும் என வேண்டி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவரின் மனங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும்.
Thanks… Dinamani