woman fake doctor arrested
தர்மபுரியில், இளம்பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்த 45 வயது போலி பெண் டாக்டர் கைது செய்யப் பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த மணி என்பவரது மனைவி வனிதா (27). ஏற்கனவே, இத்தம்பதிகளுக்கு இருபெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வனிதா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதனையடுத்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, இம்முறையும் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்ததாம். 3வதும் பெண் குழந்தையா என நினைத்த தம்பதிகள், அக்குழந்தையை கருக்கலைப்பு செய்து விட முடிவு செய்துள்ளனர். இதற்காக தெரிந்த நர்சு மூலம் பாப்பாரப்பட்டியில் கிளினிக் நடத்தி வரும் ரேணுகா என்பவரிடம் அழைத்து செல்லப் பட்டுள்ளார் வனிதா. ரேணுகாவிடம் கருக்கலைப்பு செய்து கொண்ட வனிதாவிற்கு வீட்டிற்கு திரும்பிய சில நாட்களிலேயே உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வனிதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தவறான வழியில் கருக்கலைப்பு செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அஸ்ராகார்க்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் ரேணுகா போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது. அவரைக்கைது செய்த போலீசார், ரேணுகாவின் ஆஸ்பத்திரியில் இருந்த மருத்துவப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தற்போது கைதாகியுள்ள ரேணுகா ஏற்கனவே இருமுறை கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.