இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவை இந்தியாவுக்கு தரமுடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், பிரதமர் மன்மோகன்சிங்கும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக டெல்லி வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. கச்சத்தீவை இந்தியாவுக்கு திருப்பித் தரும் பேச்சுக்கே இடமில்லை. இருநாட்டு பிரதமர்கள் செய்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யமுடியாது. இலங்கையில் தேர்தலை கண்காணிக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அழைப்பு கொடுக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தலை வெளிப்படையாக நடத்த விரும்புகிறோம். இலங்கையில் போருக்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் 145 வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து அறிவதற்காக இலங்கை அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சனையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார் ஜி.எல்.பீரிஸ்.