2023-ல் செவ்வாய் கிரகம் செல்ல பெங்களூர் வாசிகள் முன்பதிவு

நெதர்லாந்து நாட்டில் மார்ஸ் ஒன் என்ற அமைப்பு இயங்கிவருகின்றது. லாப நோக்கில்லாத இந்த அமைப்பு வரும் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு உதவி புரியும் திட்டத்துடன் ஏற்படுத்தப்பட்டதாகும்.

செவ்வாய்க் கிரகத்திற்கு செல்ல ஆரம்பிப்பது முதல், அங்கு சென்று வாழும்வரை ஒளிபரப்பு செய்வதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு உதவி புரிய அந்த அமைப்பு எண்ணுகின்றது. 2022ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள செவ்வாய்க் கிரகத்திற்கான மனிதர்களின் பயணத்திற்கு வெறும் 7 டாலர் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

மனநிலை தெளிவாக இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அதில் 30,000 பேர் அமெரிக்காவில் இருந்து பதிவு செய்துள்ளனர். இந்தப் பயணத்திற்குப் பதிவு செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 1,800ஆக உள்ளது என்றும், இதில் பெரும்பான்மையானோர் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்றும் இந்நிறுவனத்தின் தகவல் அதிகாரி ஆஷிமா டோக்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த மே 6ஆம் தேதி பதிவு செய்திருந்த இந்தியர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்தாக இருந்தது என்றும் அது இப்போது 1,800ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்குக் காரணம் தங்களின் விண்வெளிப் பயணம் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டிருப்பதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுமட்டுமின்றி, இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம், 2013ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் திட்டமிட்டுள்ள செவ்வாய்க் கிரக விண்வெளிப் பயணத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

Related posts