No improvements can be made in Tuticorin implementing sethu canal: Vaiko
தூத்துக்குடி : “”மீனவர்களின் அச்சத்தை போக்கிய பின், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம்,” என, வைகோ தெரிவித்தார். தூத்துக்குடியில், ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அவர் கூறியதாவது: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, நான் முன்னிலையில் இருந்து செயல்பட்டேன். அப்போதைய சூழ்நிலைகள் வேறு. தற்போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். கடல்வளத்தை நம்பி வாழும் மீனவர்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இத்திட்டத்தில் சர்வதேச அளவிலான, பெரிய கப்பல்கள் வந்து செல்ல முடியாது. இத்திட்டத்தால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. மீனவர்களின் அச்சத்தை போக்கிய பின், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம். ஈழத்தமிழர் படுகொலையை திசை திருப்புவதற்காக, இப்பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்துள்ளது. இலங்கையில் “காமன்வெல்த்’ மாநாடு நடத்தக் கூடாது. கருப்பர் இன பிரச்னைக்காக, “காமன்வெல்த்’ அமைப்பில் இருந்து தென்ஆப்பிரிக்கா வெளியேறியது. பாகிஸ்தான் வெளியேறியது. பல ஆயிரம் இலங்கை தமிழர்களை கொன்று, 578 தமிழக மீனவர்களை கொன்று குவித்துள்ளது இலங்கை. அங்கு மாநாடு நடத்த, மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இதை கண்டித்து, சென்னை வரும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, கறுப்பு கொடி காட்டி கண்டனம் தெரிவிக்கப்படும். கூடங்குளம் அணு மின் உலையை இயக்க கூடாது; இயக்கினால் அதை நிறுத்த முடியாது. இதை கண்டித்து, ஆக., 10 ல், சென்னையில் போராட்டம் நடத்தப்படும். குஜராத் முதல்வர் மோடி, அமெரிக்கா செல்ல விசா கேட்டுள்ளார். அதை முடிவு செய்ய வேண்டிய நாடு, அமெரிக்கா. “விசா வழங்கக் கூடாது’ என சொல்ல, யாருக்கும் உரிமை இல்லை. கூட்டணி யாருடன் என்பதை, கட்சி முடிவு செய்யும். ம.தி.மு.க., போட்டியிடும் இடங்களில், தூத்துக்குடி ஒன்றாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.