gold price dips in tamilnadu
வியாழக்கிழமை, 27 ஜூன் 2013: இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848-க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலைகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டு அரசு நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய பங்குகளை திரும்ப பெற்று தங்கத்தில் அதை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பல்வேறு ஐரோப்பிய நாடுகள் மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக தங்களிடம் இருப்பில் இருந்த தங்கத்தை விற்க ஆரம்பித்தன. இதனால், விலை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதிகபட்சமாக ஏப்ரல் 17ம் தேதி ஒரு கிராம் ரூ.2,425க்கு விற்பனையானது. அதன்பின்னர் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் வெளி நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த புதன்கிழமை அறிவித்தது. இதனால் ஏராளமானவர்கள் மீண்டும் அமெரிக்க நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவாக தங்கத்தின் விலை கணிசமாக குறைய ஆரம்பித்துள்ளது.