sethusamudram shipping canal project karunanidhi birthday
மத்திய, மாநில அரசுகள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தங்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் கருணாநிதியின் 90-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் (3 ஜூன் 2013) திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது:- திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டன. ஆயிரங்கால் மண்டபத்தை பூதங்கள் கட்டின என்பதுபோல தலைமைச் செயலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர் (கருணாநிதி) வரை பார்த்து பார்த்து கட்டினோம். அதை மருத்துவமனையாக அறிவித்து, வேகவேகமாகப் பணிகள் நடைபெற்று, தற்போது பாழடைந்து கிடக்கிறது.
செம்மொழி தகுதியைத் தமிழ் பெற்றதற்கு முக்கியமான காரணம் கருணாநிதிதான் என்று சோனியா காந்தி கூறினார். தமிழுக்குச் செம்மொழி தகுதியை நான் பெற்றுக்கொடுத்தேன் என்பதற்காக செம்மொழி என்ற வார்த்தையே முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. செம்மொழி என்ற பெயர் கொண்டதையெல்லாம் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடத்தினால், கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய என் பெயரைப் பொறிக்க வேண்டும் என்பதற்காகவே அதன் திறப்பு விழா இன்னும் நடைபெறவில்லை.
போராட்டம்: தமிழக மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடிய திட்டம் சேது சமுத்திரத் திட்டம். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு அந்நிய செலாவணி அதிகரிக்கும். கப்பலின் பயண தூரம் பெருமளவு குறையும். ஆனால், இந்தத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற முன்வரவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்க்கின்றனர். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றக் கூடாது, ராமர் கட்டிய பாலம் அங்கிருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டால் என்னை நாத்திகன் என்பர். வேண்டுமானால் இந்தத் திட்டத்துக்கு, “சாட்சாத் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி திட்டம்’ என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். எனக்குப் பெயர் முக்கியமில்லை. திட்டம்தான் முக்கியம். இதனை தமிழக அரசு ஆவன செய்யும் என்று நம்புகிறேன். அப்படிச் செய்யாவிட்டால் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும். திமுக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, இதற்கான முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்தப் போராட்டச் செய்திதான் என்னுடைய 90-ஆவது பிறந்த நாள் செய்தி.
தேர்தல் நிதி: பிறந்த நாள் விழாவில் ஒரு நாளில் மட்டும் ரூ.1.20 கோடி வரை கிடைத்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு தேர்தலில் பகைவர்களை வெல்ல நியாயமான வழிகளில் செலவழிக்கப்படும்.
வரும் தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். அது ஆட்சி அமைக்கும் வகையில் இல்லாவிட்டால், நடைபெறும் ஆட்சியை வழி நடத்தும் எஜமானர்களாக இருப்போம் என்றார் கருணாநிதி.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கருணாநிதியை வாழ்த்திப் பேசினர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கூட்டத்துக்கு தலைமை வகிக்க இருந்தார். ஆனால், உடல்நலம் சரியில்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், திருச்சி சிவா, ஆ.ராசா, வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.