Five killed as cars ram each other in Tiruchi-Madurai NH
திருச்சி அருகே நள்ளிரவில் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த கோர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:–
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பத்திரம் கருப்பூர் வானுவதெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 58). இவரது உறவினர் கும்பகோணம் பழனிச்சாமி நகரை சேர்ந்த கண்ணன் (50). இவரது மனைவி விஜய லெட்சுமி (42). இந்த தம்பதியின் மகன் ராஜ்குமார் (15). கும்பகோணம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மாரிசாமி (47). இவர்கள் 5 பேரும் வெங்கடசாமியின் உறவினர் குழந்தைக்கு அருப்புக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த காதணி விழாவில் கலந்து கொள்ள நேற்று இரவு 10 மணிக்கு ஒரு சொகுசு காரில் வீட்டில் இருந்து புறப்பட்டனர். காரை கும்பகோணம் இனாம் பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த கார் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் திருச்சி– மதுரை 4 வழிச்சாலையில் கிறிஸ்துராஜா கல்லூரி அருகே சென்று கொண்டிருந்து. அதிவேகமாக சென்ற கார் திடீரென நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசைக்கு சென்றது. அந்த சமயத்தில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி காலை நாளிதழை ஏற்றி வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. மதுரையில் இருந்து வந்த காரை மதுரை சொக்கலிங்கம் நகரை சேர்ந்த நாகராஜன் (19) என்பவர் ஓட்டி வந்தார்.
மோதிய வேகத்தில் 2 கார்களும் அப்பளம் போல நொறுங்கின. காருக்குள் இருந்தவர்கள் இடுபாடுகளுக்குள் சிக்கி அலறினார்கள். இதை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு காருக்குள் சிக்கி இறந்தவர்களையும், உயிருக்கு போராடியவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் கும்பகோணத்தில் இருந்து காரில் சென்ற வெங்கடசாமி, கண்ணன், அவரது மகன் ராஜ்குமார்,மாரிசாமி மற்றும் மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்த காரில் இருந்த மதுரை டி.எஸ்.பி. நகரை சேர்ந்த பிரதாப் (24) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் இந்த 2 கார்களிலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய டிரைவர்கள் நாகராஜன், ரமேஷ் மற்றும் விஜயலெட்சுமி ஆகியோரை மீட்ட போலீசார் விஜயலெட்சுமியை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியிலும் மற்ற 2 பேரையும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி அருகே நேற்று நள்ளிரவு நடந்த இந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்துக்கு காரணமான கும்பகோணத்தை சேர்ந்த கார் டிரைவர் ரமேஷ் மீது 4 பிரிவுகளில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Five killed as cars ram each other in Tiruchi-Madurai NH
Five persons died in a road accident involving two cars on the Tiruchi-Madurai national highway on the city outskirts at Mekkudi cut road in the early hours on Wednesday. All the victims were men. Police said a car proceeding towards Madurai lost control and went over the centre median and dashed against another car that was coming in the opposite direction. Investigations are on.