திருமணம் நடக்க இருக்கும் மணமகன் திருமண மண்டபம் முன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியது.திருப்புவனம் அருகே ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டியின் மகன் மணிகண்டன் (27).
இவர் திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். மணிகண்டனுக்கும், மதுரையைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருப்புவனம் அருகே லாடனேந்தலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
சனிக்கிழமை இரவே மணமகள் வீட்டார் திருமண மண்டபத்தில் வந்து தங்கினர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மண்டபத்தில் குழாயில் தண்ணீர் வரவில்லையாம்.
இதுகுறித்து தகவலறிந்த மணமகன் மணிகண்டன், வீட்டில் உள்ளவர்கள் தடுத்தும் கேட்காமல், திருமண மண்டபத்துக்கு மோட்டார் சைக்கிளில் விரைந்துள்ளார். மண்டபம் அருகே வந்தபோது, மதுரையில் இருந்து பரமக்குடிக்குச் சென்ற வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றியதில் மணமகன் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
திருமண நாளன்றே மண்டபத்தின் முன் மணமகன் பலியான சம்பவத்தால் உறவினர்கள், அப்பகுதி கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.