ரிப்பன் பில்டிங் கட்டிடம் திறக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு

Ripon building 100th anniversary 

Ripon building 100th anniversary

சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த கம்பீரமான மாளிகை கடந்த 1909ம் ஆண்டு கட்ட துவங்கி 1913ம் ஆண்டு முடிக்கப்பட்டது. மூன்று தளங்கள் கொண்ட இந்த மாளிகையின் மொத்த பரப்பளவு 25 ஆயிரம் சதுரடி. மாளிகை 252 அடி நீளமும் 126 அடி அகலமும் மாளிகைக்கு அழகு சேர்க்கும் கடிகார கோபுரம் 132 அடி உயரமும் கொண்டவை. கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம், 8 அடி விட்டம் உடையது.இந்திய – ரோமானிய கட்டட கலை வடிவமைப்பு கொண்ட ரிப்பன் மாளிகையில் வெப்பத்தை உள் வாங்காத வகையிலான மெட்ராஸ் டெரஸ் கூரை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் செங்கல், சுண்ணாம்பு, மணல், கடுக்காய் தண்ணீர், வெல்லம் கலந்த கலவையில் அந்த கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் ஒவ்வொரு தளத்திலும், ராட்சத இரும்பு உத்தரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன் மேல் நெருங்கிய இடைவெளியில் தேக்குமர கட்டைகள் பொருத்தப் பட்டுள்ளன. அந்த மரத்திற்கு மேல் செங்கல் சுண்ணாம்பு கலவை கலந்த கலவையில் தளம் அமைக்கப்பட்டுள்ளது.தரை தளத்தில் கடப்பா கல் மூலம் தரை அமைக்கப்பட்டது.இந்த பிரமிக்க வைக்கும் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாத முதலியார்.சுமார் நான்கு ஆண்டு காலம் கட்டப்பட்ட இந்த மாளிகைக்கு அப்போது ஆன செலவு 7.5 லட்சம் ரூபாய். லோகநாத முதலியார் 5.5 லட்சம் ரூபாய் மட்டுமே இதற்காக பெற்றுக் கொண்டார் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் உள்ளாட்சி முறையின் தந்தை என கருதப்படும் ரிப்பன் பிரபுவின் நினைவாகவே இந்த கட்டடத்துக்கு ரிப்பன் கட்டடம் என பெயரிடப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் 1880-ஆம் ஆண்டு முதல் 1884-ஆம் ஆண்டு வரை கவர்னர் ஜெனரலாக அவர் பதவி வகித்துள்ளார். ரிப்பன் பிரபுவின் சிலையும் கட்டட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளதை இப்போதும் காணலாம்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி கடந்த 1688-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் உருவாக்கப்பட்ட 2-ஆவது மாநகராட்சி என்ற சிறப்பை சென்னை மாநகராட்சி பெற்றுள்ளது. பிரிட்டனுக்கு வெளியே உருவான முதல் மாநகராட்சி சென்னை என்பது குறிப்பிடத்தக்கது..

இதன் மூலம் 325 ஆண்டுகள் வரலாற்றை உடையது சென்னை மாநகராட்சி என்பதையும் இதில் 100 ஆண்டுகளாக மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளை பார்த்துக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது சென்னையின் வெள்ளை மாளிகையான ரிப்பன் பில்டிங் என்பதையும் புரிந்து கொள்ளலாம்

இதே ரிப்பன் பில்டிங்கில் உள்ள மணிக்கூண்டு கடிகாரம் கால் மணி நேரத்துக்கு 4 முறை ஒலித்து, ஒரு மணி நேரத்தில் 16 முறை ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இப்போது இந்த கடிகாரத்தின் மறு சீரமைப்பு பணிகளை நடந்து வருகின்றன. டயல் வேலைகள் ஒரு சில நாள்களில் முடிவடைந்து ஒலிக்க தொடங்கி விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Ripon building 100th anniversary

Related posts