11 Alappuzha Dhanbad Express passengers were killed when they ran in the track in which another train crossed from opposite direction and runs over passengers in Andhra Pradesh
இரயிலில் தீ பிடித்ததாக பரப்பப்பட்ட வதந்தியால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து விட்டு இரயில் நின்றவுடன் கீழே குதித்து இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் ஓடிய போது எதிரில் வந்த மற்றொரு இரயில் மோதி 11 பேர் பரிதாபமாக நசுங்கி செத்தனர்.
கேரளாவில் உள்ள ஆலப்புழா எனும் ஊரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் எனும் ஊருக்கு, தன்பாத் பொகாரோ எக்ஸ்பிரஸ் இரயில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் , ஒடிசா, மற்றும் பீகார் வழியாக ஜார்கண்ட் சென்றடையும். ஆலப்புழாவில் இருந்து கிளம்பிய தன்பாத் பொகாரோ எக்ஸ்பிரஸ் இரயில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஆந்திரபிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொட்லாம் கிராமதிற்கு அருகில் போய் கொண்டிருந்த போது எஸ்.1, மற்றும் எஸ்.2 கம்பர்டுமென்ட் பெட்டிகளில் பயணித்த பயணிகள், இரயிலுக்குள் புகை வருவதாக சொல்லி கூச்சலிட்டுள்ளார்கள்.
அதிர்ச்சியுற்ற ஏனைய பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தினர். உடனடியாக இரயில் நிறுத்தப்பட்டவுடன், இரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரவி பயணிகள் பலர் அலறியடித்துகொண்டு இரண்டு பக்கமும் குதித்தார்கள். வலதுபுறம் குதித்த பயணிகள் அங்கு உள்ள தண்டவாளத்தில் ஓடினார்கள். அந்த வேளையில், அந்த தண்டவாளத்தில் படு வேகமாக சென்ற ராயகூடாவிஜயவாடா பாசஞ்சர் ஓடிகொண்டிருந்த இரயில் பயணிகள் மேல் மோதியது. இந்த மோதலில் உடல் சிதறி 11 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள். சுமார் 1/2 கிலோ மீட்டர் வரை இழுத்து சென்றதால் சடலங்கலில் உள்ள உடல் பாகங்கள் சிதறி அடையாளம் காண முடியானத நிலையில் சிதைந்து போனது. மேலும் 10 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள். அவர்களை விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு மீட்பு படையினர் மீட்டு அனுப்பி வைத்தார்கள்.
இந்த இரயில் விபத்து பற்றி தகவல் அறிந்த அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் டிராக்டர்கள், மற்றும் லாரிகள் மூலமாக அங்கு விரைந்து வந்து பயணிகளை காப்பாற்ற முயற்சி செய்தார்கள். இன்று அதிகாலை 2 மணி வரை மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த விசாகப்பட்டினத்து எம்.பி பொச்சா ஜான்சிலட்சுமி மற்றும் மேற்கு ரயில்வே துறை அதிகாரி மீனா ஆகியவர்கள் உடனே வந்து பார்வையிட்டு, மீட்பு பணியினை வேகப்படுத்தினர்.
இந்த பயங்கர விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான மனோஜ்குமாரின் மனைவி சுவேதா சிங் (வயது 33), மகள்கள் சம்ஹீதா குமாரி (வயது 10), சவுரியா (வயது 2), மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் சிங் (வயது 42) உள்பட 11 பேர் பயணிகள் உடல் நசுங்கி பலியானதாக இன்று அதிகாலை கலெக்டர் காந்திலால் தண்டே கூறினார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்று அஞ்சப்படுகிறது.
தீபாவளிக்கு மறுநாள் நிகழும் இலட்சுமி பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை, எனவே ஏராளமான பயணிகள் நேற்று இரயிலில் பயணம் செய்த போது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.