PMK Gk Mani against tamilnadu government
தமிழக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்குமாறு பாமக தலைவர் ஜி.கே. மணி 15 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் நலன்களுக்கான போராட்டங்களை நடத்துவதற்கும், பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. தருமபுரி, விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல வாரங்களாக 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியவில்லை. மற்ற மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், அடக்குமுறைகளுக்கு குறைவில்லை. காவல்துறை, 144 தடை உத்தரவு ஆகியவற்றின் உதவியுடன் ஆட்சியை நடத்திவிடலாம். பொதுமக்களோ அல்லது எதிர்க்கட்சிகளோ எதிர்த்தால் அவர்களை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக ஆட்சியாளர்கள் நினைப்பதையே இது காட்டுகிறது. இது ஜனநாயகப் படுகொலை ஆகும். அதிமுக அரசின் அடக்குமுறையால் பாதிக்கப்படாத அரசியல் கட்சிகளே தமிழகத்தில் இல்லை.
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, ஊடகங்கள், அரசு அதிகாரிகள், சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பினருமே அரசின் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. இதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் கடந்த 28.08.2013 அன்று அறிக்கை விடுத்தார்.
அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி 29.08.2013 அன்று கடிதம் எழுதினார். அக்கடிதத்தில்,‘‘ தமிழக அரசின் அடக்குமுறைகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. அரசின் இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை எதிர்த்து ஜனநாயகத்தில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாமக தலைவர் ஜி.கே. மணியின் கடிதம் கீழ்க்கண்ட தலைவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
1) கலைஞர் அவர்கள், தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்.
2) பி.எஸ்.ஞானதேசிகன் அவர்கள், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
3) பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், தலைவர், பாரதிய ஜனதா (தமிழ்நாடு).
4) விஜயகாந்த் அவர்கள், தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
5) கி.வீரமணி அவர்கள், தலைவர், திராவிடர் கழகம்.
6) வைகோ அவர்கள், பொதுச் செயலாளர், மதிமுக.
7) ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள், தமிழ் மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
8) தா. பாண்டியன் அவர்கள், தமிழ் மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
9) ஜவாஹிருல்லாஹ் அவர்கள், சட்டப்பேரவைக் கட்சி தலைவர், மனிதநேய மக்கள் கட்சி.
10) மருத்துவர். கிருஷ்ணசாமி அவர்கள், தலைவர், புதிய தமிழகம் கட்சி.
11) பி.வி. கதிரவன் அவர்கள், பார்வர்டு பிளாக்.
12) பி.டி. அரசகுமார் அவர்கள், தலைவர், தேசிய பார்வர்டு பிளாக்
13) ஜி.கே. நாகராஜ் அவர்கள், பொதுச் செயலாளர், கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
14) பாரிவேந்தர் அவர்கள், தலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி.
15) உ. தனியரசு அவர்கள், தலைவர், கொங்குநாடு இளைஞர் பேரவை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.