Vanuatu Postal Station Underwater
நாட்டின் தொலைத் தொடர்புப் பணியில் தபால் சேவைக்கென முக்கியப் பங்கு இன்றைக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட சேவையை அளிக்கும் தபால் நிலையங்கள் பொதுவாக மக்கள் எளிதாக அணுகும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் இந்தத் தபால் நிலையம் முற்றிலும் வித்தியாசமானது.
வனுவாத்தூ தபால் நிலையம் நிலத்திலிருந்து 3 மீட்டர் கடலுக்கடியில் செயல்பட்டு வருகிறது.ஆஸ்திரேலியா அருகே சுமார் 100 தீவுகள் சிதறிக் கிடக்கின்றன.
வனுவா என்றால் நிலம் என்று பொருள். இதனால் இந்த தீவு வனுவாத்தூ என அழைக்கப்படுகிறது.
ஹைடுஅவே தீவின் அருகே கடலுக்கு அடியில் இருக்கும் இந்த தபால் நிலையத்தை காண வரும் பார்வையாளர்கள் தண்ணீருக்குள்ளே அணியப்படும் முகமூடி உள்ளிட்ட கவசங்களையெல்லாம் அணிந்துக்கொண்டு செல்கின்றனர்.
வனுவாத்தூவில் கிடைக்கும் சிறப்பு வாட்டர் ப்ரூப் தபால் அட்டைகளை இதுவரை ஆயிரக்கணக்கானோர் தங்கள் அன்பானவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளனர்.
இங்கிருந்து அனுப்பபடும் கடிதங்கள் மற்றும் தபால் அட்டைகளுக்கும் பிரத்யேக ஃப்ராங்கிங் முறை இருக்கிறது.
மற்ற எல்லா தபால் நிலையங்களை போலவே இந்த தபால் நிலையத்தின் தபால் பெட்டியில் போடப்படும் தபால்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இங்கு தபால் ஊழியர்களாக இருக்க ஒரு கூடுதல் தகுதி வேண்டும். தபால் பெறுவது, அனுப்புவது உள்ளிட்ட நடைமுறைகளோடு, ஆழ்கடல் நீச்சலும் தெரிய வேண்டும். நான்கு ஸ்கூபா வீரர்கள் இங்கு பணியிலுள்ளனர். இவர்களுக்கு சுழற்சி முறையில் பணி அட்டவணை போடப்படுகிறது.
2003ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தபால் நிலையத்திற்கு இதுவரை ஒரு லட்சம் பார்வையாளர்கள் வந்துள்ளனர்.வனுவாத்தூ தபால் நிலைய நினைவாக இரண்டு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கடல் பகுதிக்கு க்ரூஸ் கப்பல்கள் வரும் போதெல்லாம் இங்குள்ள ஊழியர்களுக்கு பணி அதிகரிக்கும். இந்த தபால் நிலையத்தை பல வண்ண மீன்களும், ஆக்டோபஸ்களும் தங்கள் இல்லங்களாக்கிவிட்டன.
நிலத்திலிருக்கும் தபால் நிலையங்கள் பூட்டியிருந்தால் நாம் பார்த்து அறிந்துக்கொள்ளலாம். ஆனால் இந்த தபால் நிலையம் திறந்திருக்கும்போது தண்ணீரின் மேலே பார்வைக்கு தெரியும்படி கொடி ஒன்று ஏற்றப்பட்டிருக்கும்.
இந்த இடம் தற்போது பலரால் விரும்பப்படும் சுற்றுலா தலமாக ஆகிவிட்டது.