தீ பிடித்து எறியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தானாக தீப்பிடித்து எரியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்த கர்ணன், ராஜேஸ்வரி தம்பதிகளின் மகன் ராகுல். இக்குழந்தை பிறந்து இரண்டரை மாதங்களில் இதுவரை 4 முறை தானாக தீப்பற்றியதால் கிராம மக்கள் இந்த குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

ஸ்பான்டின் க்யூமன் கம்பன்ஷன் எனும் நோயினால் பாதிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் இக்குழந்தையின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இதுகுறித்து நாராயணபாபு கூறுகையில், குழந்தை ராகுலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குழந்தையின் வியர்வை, ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை பரிசோதனை செய்து வருகிறோம்.

எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும் இவற்றை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அப்போலோ மருத்துவமனையில் வியர்வை மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனை முடிவு இரு தினங்களில் தெரியவரும். இப்போது குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீக்காயங்கள் ஆறிவருகிறது. குழந்தை குணமடைந்ததும் டிஸ்சார்ஜ் செய்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

ராகுலின் தந்தை கர்ணன் கூறுகையில், எனது குழந்தை உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பசி எடுக்கும்போது அழுகிறான். தாய்பால் மட்டுமே குடிக்கிறான்.

சொந்த ஊரில் எங்களுக்கு என்று இருந்த குடிசை வீடு தீப்பிடித்து எரிந்துவிட்டது. ஊருக்குள் எங்களை வித்தியாசமாக பார்க்கின்றனர். இதனால் சொந்த ஊர் செல்ல விரும்பவில்லை. சென்னையிலோ, புறநகரிலோ வீடு கொடுத்து எனது குடும்பத்தை தமிழக அரசு வாழ வைக்க வேண்டும். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜெனரல் என்ற தனியார் ஏசி நிறுவனம் குழந்தை ராகுலின் குடும்பத்துக்கு ஏசி மெஷின் கொடுப்பதாகவும், மின் கட்டணத்தை அவர்களே செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி நேற்று இரவு வந்து, குழந்தை ராகுலின் உடல் நலம் பற்றி பெற்றோரிடம் விசாரித்து, பின்பு மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்துள்ளார்.

ராகுலின் தந்தை கர்ணன், எனது குடிசை தீப்பற்றி எரிந்துவிட்டது. கருணை அடிப்படையில் வீடு வழங்கும்படி கேட்டார். அதற்கு அமைச்சர், இதுதொடர்பாக கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Related posts