கேபினட் அமைச்சர்கள் சி.பி. ஜோஷி, அஜய் மக்கான் ராஜினாமா

மத்திய  கேபினட் அமைச்சர்கள் ஜோஷி, அஜய் மக்கான் ஆகிய இருவரும் சனிக்கிழமை (15/06/2013) இரவு தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர். இவர்களது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் மத்திய அமைச்சரவை  திங்கட் கிழமை மாலையில் மாற்றியமைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மாளிகை அதிகாரி தெரிவித்தார். கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று சி.பி. ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் தரைவழி போக்குவரத்து மற்றும் ரயில்வே ஆகிய இரண்டு இலாக்காக்களை தன்வசம் வைத்திருந்தார்.

அஜய் மக்கான் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை அமைச்சராக இருந்தார். கட்சிக்காக பணியாற்ற தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவை  நாளை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 வது முறையாக மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இந்த முறை பிரதமர் மன்மோகன்சிங் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல காலியிடங்களை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரயில்வே அமைச்சராக பவன்குமார் பன்சாலும், சட்ட அமைச்சராக இருந்த அஸ்வினி குமாரும் சில பிரச்சினைகளில் சிக்கி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதையடுத்து ஏற்பட்ட வெற்றி இடங்களை பிரதமர் மன்மோகன்சிங் நாளை  நிரப்பவிருக்கிறார்.

 

இந்நிலையில் அஜய்மக்கான், ஜோஷி இருவரும் கட்சிப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அதோடு, அஜய்மக்கானுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பணியும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது. மத்திய அமைச்சரவையில் ராகுல்காந்தியின் ஆலோசனைப்படி, பல புதிய முகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

Related posts