மொளச்சூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் பலி

திமுக கிளை நிர்வாகிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகபலியானார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மொளச்சூர் கிராமப் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது கொடிக்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கியதால் திமுக கிளை நிர்வாகிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாளை யொட்டி கொடிக்கம்பம், கல்வெட்டு இன்று திறக்கப்படுவதாக இருந்தது. அதற்கான ஆயத்த பணிகள் நேற்று இரவு நடந்தது. கட்சியின் தோரணங்கள், அலங்கார பணிகளும் செய்யப்பட்டு இருந்தது.

நேற்று நள்ளிரவு மொளச்சூர் பகுதி 45வது வார்டு திமுக கிளைச் செயலாளரும், அரசு பேருந்து ஓட்டுநரும் ஏ.பாஸ்கர் (வயது 45), 12வது வார்டு கிளைச் செயலாளர் சி. முருகன் (வயது 45), 6வது வார்டு கிளைச்செயலாளர் டி.பாஸ்கர் (வயது 43) ஆகிய மூவரும் இரும்பினால் ஆன கொடிக்கம்பத்திற்கு கருப்பு-சிவப்பு வர்ணம் பூசி அந்த கொடிக்கம்பத்தை கல்வெட்டின் மீது பதிப்பதற்காக மேலே தூக்கியுள்ளனர்.

அப்போது கொடிக்கம்பம் அந்த வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசியதால் அவர்கள் 3 பேர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் அவர்கள் மூவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அவர்களது உடலை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related posts