ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது பெங்களூ

ipl-cricket-bangalore-won

டெல்லி டேர்டெவில்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். டெல்லி அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.

முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுக்கவே ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. அதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பெங்களூர்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி, டெல்லியை பேட் செய்ய அழைத்தார். டெல்லி அணியில் வார்னர்-சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்தது. வார்னர் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். சேவாக் 23 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஜுனேஜா 17, ரோரர் 14, கேப்டன் ஜெயவர்த்தனா 28 ரன்களில் ஆட்டமிழக்க, 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி.

ஜாதவ்-பதான் விளாசல்: இதன்பிறகு கேதார் ஜாதவுடன் இணைந்தார் இர்ஃபான் பதான். ராம்பால் வீசிய, ஆட்டத்தின் 19-வது ஓவரில் பதான் ஒரு பவுண்டரியை விளாச, ஜாதவ் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாசினார். ஆர்.பி.சிங் வீசிய கடைசி ஓவரில் பதான் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது டெல்லி. கடைசி 2 ஓவர்களில் டெல்லிக்கு 30 ரன்கள் கிடைத்தன.

ஜாதவ் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29, இர்ஃபான் பதான் 8 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பெங்களூர் தரப்பில் ஜெயதேவ் உனட்கட் 4 ஓவர்களில் 24 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டம் டை: பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் லோகேஷ் ராகுல் 12, கிறிஸ் கெயில் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு கேப்டன் கோலி-டிவில்லியர்ஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 12.3 ஓவர்களில் 103 ரன்கள் சேர்த்தது. டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

19-வது ஓவரில் கோலி 50 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் பெங்களூரின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. பதான் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் ராம்பால் சிக்ஸர் அடிக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டதால் ஆட்டம் டையில் முடிந்தது.

சூப்பர் ஓவர்: இதையடுத்து சூப்பர் ஓவர் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணியில் டிவில்லியர்ஸýம், கெயிலும் பேட் செய்தனர். உமேஷ் யாதவ் வீசிய சூப்பர் ஓவரில் டிவில்லியர்ஸ் 2 சிக்ஸர்களை விளாச அந்த அணி 15 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ராம்பால் வீசிய முதல் பந்திலேயே கெயிலிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் வந்த இர்பான் பதான் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியை விளாச, கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 5-வது பந்தில் பதான் ஒரு ரன் எடுக்க, கடைசிப் பந்தில் ரோஹெர் போல்டு ஆக, பெங்களூர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ipl-cricket-bangalore-won

Related posts