நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதாக ரஹ்மானியாபுரம் மக்கள் தெரிவித்தனர். சில வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஜாகீர் உசேன் நகர், வாவாநகரம், அச்சன்புதூர், கொருவன் சாலை பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
திரும்பவும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்காசி ஆர்.டி.ஓ. ரமேஷ், வடகரை, அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
அதே பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பும் நில அதிர்வு ஏற்பட்டது. தற்போது இந்த பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் புவியியல் ஆராய்ச்சியாளர் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.