சென்னை; ‘கொரோனா பரிசோதனைக்காக தினமும், 50 பேரை கட்டாயம் பிடித்து வர வேண்டும்’ என, களப் பணியாளர்களுக்கு, மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஒரு நோயாளிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வகையில், ‘பில்’கணக்கிடப்படுகிறது.
சென்னையில் கொரோனா தொற்று
சென்னையில் கொரோனா தொற்றை கண்டறிய, களப் பணியாளர்கள் வாயிலாக தடுப்பு நடவடிக்கைகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில், இலக்கு நிர்ணயிக்காமல், தொற்று தடுப்பை மட்டுமே குறிக்கோளாக வைத்து, மாநகராட்சி செயல்பட்டு வந்தது.இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஒருவருக்கு, பரிசோதனை செலவு, வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான செலவு, உணவு, மருந்து, மாத்திரை என, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, ‘பில்’ போட்டு, கணக்கு எழுதப்படுவதாக கூறப்படுகிறது.
இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி, களப் பணியாளர்களுக்கு உத்தரவு
இதில், தங்களுக்கு பெரும் தொகை கிடைப்பதால், அதிகாரிகள், இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி, களப் பணியாளர்களுக்கு, உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, கொரோனா நோயாளிகளுக்கு மட்டும், 500 கோடி ரூபாய் வரை மாநகராட்சி செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இது பற்றி, மாநகராட்சி களப்பணியாளர்கள் கூறியது என்னவென்றால்: எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தினமும், 50 நபர்களை பரிசோதனைக்கு அழைத்து வர வேண்டும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர். அதன்படி, 50 பேரை அழைத்து வரவில்லை என்றால், அதிகாரிகள், எங்களை கண்டிப்பதுடன், அடுத்த மாதம் சம்பளம் கிடைக்காது என, மிரட்டுகின்றனர்.
கொரோனா நோயாளி பரிசோதனைக்கு 6,000 ரூபாய் செலவு
கொரோனா கண்டறியும் ஒரு நோயாளிக்கு, பரிசோதனைக்கு மட்டும், 6,000 ரூபாய் செலவு செய்யப்படுவதாக, ‘பில்’ போடப்படுகிறது. அது போல், வாகன செலவு, உணவு, மருந்து மற்றும் வீட்டில் தகரம் என, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, மாநகராட்சி அதிகாரிகள் செலவு செய்வதாக கணக்கு காட்டுகின்றனர். இதன் காரணமாக, முதல்நிலை தொற்றுடன், எவ்வித அறிகுறியும் இல்லாத நோயாளியை கூட, வீட்டில் தனிமைப்படுத்தாமல், கொரோனா சிறப்பு மையத்துக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்துகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். இது பற்றி, மாநகராட்சி சுகாதார நல அலுவலர் ஜெகதீசனிடம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டார்.