பெங்களூரில் வரலாறு காணாத மழை 122 ஆண்டுகளுக்கு பிறகு 100 மி.மீ பதிவு

Heavy rain in bangalore

பெங்களூரில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மட்டும் 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தென் மேற்கு பருவக் காற்று ஜூன் 2-ம் திகதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரில் மே 30, 31 ஆகிய திகதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, சனிக்கிழமை அதிகாலை வரை பெய்தது. சனிக்கிழமை காலை(ஜூன் 1) எடுக்கப்பட்ட மழை அளவுப்படி, பெங்களூரில் 100 மி.மீ மழை பெய்துள்ளது.

பெங்களூரில் கடந்த 1891-ம் ஆண்டு, ஜூன் 16-ம் திகதி எடுக்கப்பட்ட மழை அளவின்படி, பெங்களூரில் 101.6 மி.மீ மழை பதிவானது. இதுவே பெங்களூரில் ஜூன் மாதங்களில் பெய்த மழையில் அதிக அளவாகும். 122 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை(ஜூன் 1) 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஜூன் மாதங்களில் பெங்களூரில் பெய்த மழைகளில், 2-வது அதிகப்பட்சமாகும் என்று பெங்களூர் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், ஹொசகெரேஹள்ளி, அல்சூர், ராஜாஜிநகர், ஜெயநகர், ஹனுமந்த் நகர், கர்த்திரிகுப்பே ஆகிய பகுதிகளில், சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், மரங்கள் வெட்டப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மேலும் ரோஷன் நகர், கனகபுரா சாலை, உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் அப்பகுதியில் இருந்த குடியிருப்புகளில் மழை நீர் உள்புகுந்தது. இந்நிலையில் பெங்களூரில் அடுத்த 24 மணி நேரத்தில்(ஜூன் 3, காலை 8 மணி) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Heavy rain in bangalore 2013

Heavy rain in bangalore

Related posts