காதல் திருமணம் செய்து கொண்ட தன் தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன் சபரிநாதன்.
நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமின் மகன் சிவா(வயது 21).
இவரும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த காசிநாடார் மகள் சவுமியா(வயது 21) என்பவரும் மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட தொடர் பால் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து கடந்த 5ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தை சவுமியா வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது நண்பர்கள் பொன்னேரி பகுதியை சேர்ந்த சேகர்(21), செல்லப்பாண்டியன்(29) ஆகியோருடன் ஒரு காரில் சபரிநாதன் நாகர்கோவில் வந்து சவுமியா, சிவா, ஜெயராம் ஆகியோரை கத்தியால் கழுத்தை அறுத்து, வயிற்றில் சரமாரியாக குத்தினர்.
இதில் சவுமியா, ஜெயராம் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த பொலிசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.
இந்நிலையில் கைதான சபரிநாதன் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது தந்தை பெயர் காசி நாடார். எங்களது சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டம்.
தந்தையின் மறைவுக்கு பிறகு நாங்கள் பொன்னேரியில் குடியேறினோம். எங்கள் வீட்டில் மொத்தம் 4 ஆண்கள், 2 பெண்கள்.
இதில் நான் மூத்தவனாக பிறந்ததால் குடும்ப பொறுப்பை கவனித்தேன். சவுமியா மீது நாங்கள் அனைவருமே பாசமாக இருந்தோம். அவளது திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டேன்.
75 பவுன் நகைகள் சேர்த்தேன். லட்சக்கணக்கில் பணமும் சேர்த்து வைத்தேன்.
ஆனால் யாருக்கும் தெரியாமல், எதை பற்றியும் யோசிக்காமல் வீட்டை விட்டு ஓடி விட்டாள். பார்ப்பவர்கள் எல்லாம் இதை கேவலமாக பேசினர்.
உறவினர்கள் சிலர் எனது தங்கையை பார்த்து விட்டு வந்து கஷ்டப்படுவதாக கூறினார்கள்.
சாதி எனக்கு முக்கியமல்ல, ஆனால் நல்ல வாழ்க்கையை அவள் தேர்வு செய்யவில்லை.
காதலுக்காக குடும்ப கவுரவத்தை சீரழித்து விட்டு, இனி அவள் கஷ்டப்பட்டு வாழ வேண்டாம் என முடிவு செய்தேன்.
எனவே அவளை கொன்று விட முடிவு செய்தோம். நான் சிவாவை தீர்த்து கட்டுவது என்றும், மற்ற 2 பேரில் ஒருவன் எனது தங்கையையும், மற்றொருவன் இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்த சிவாவின் தந்தையை தீர்த்துகட்டுவது என முடிவு செய்தோம்.
ஆனால் சிவா தப்பி விட்டான். கொலை செய்ததை பற்றியோ, தண்டனை கிடைப்பது பற்றியோ நான் கவலைப்படவில்லை என வாக்குமூலம் இருப்பினும் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் .