இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

உலகத்தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சை விளார்சாலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி இருகின்றனர். தமிழினம் இனம் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிறப்பாக தொடரும்.

உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப்போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு அந்த அரசு உதவி செய்துள்ளது. ஆனால் எத்தனை இடர்பாடு வந்தாலும் அதை எதிர்த்து போராடியவர் பிரபாகரன்.

புலிகளை வீழ்த்த அனைத்து வழிகளிலும் இந்தியா உதவி செய்தது. மன்மோகன்சிங் செய்த தவறையே இன்றைய பிரதமர் மோடியும் செய்கிறார். இன்று இலங்கையில் சீனா கால் பதித்துள்ளது என்றால் ஆபத்து இந்தியாவை சூழ்ந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது விடுதலைப்புலிகளுக்கு பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக பிரபாகரன் தலைமையில் வலிமையான போராட்டம் தொடரும். எனவே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் வலிமை பெற, இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

விழாவில் ராஜேந்திர சோழன், ஜெயப்பிரகாசம், முத்தமிழ்மணி, தாயப்பன், உலகத்தமிழர் பேரமைப்பு பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சாமி.கரிகாலன் நன்றி கூறினார்.

நன்றி : தினமணி..

Related posts