இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

கடந்த 2011–ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை கண்டித்தும், 5 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன.

இதையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

பின்னர், 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய அதிபர் ராஜபக்சே ஆலோசித்து வருவதாகவும் அந்நாட்டின் அமைச்சர்கள் தெரிவித்தனர். பொதுமன்னிப்பு வழங்கும்பட்சத்தில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை வாபஸ் பெறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசும், இலங்கை அரசும் எந்த விதமான தகவல்களை தெரிவிக்கவில்லை.

மீனவர்கள் விடுதலை விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் 15 பேர் நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினர். இதற்கிடையில், மத்திய அரசு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திடீரென வாபஸ் பெற்றது. இதையடுத்து மீனவர்களின் விடுதலை உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட தமிழக மீனவர்களின் மரண தண்டனையை அதிபர் மகிந்த ராஜபக்சே ரத்துசெய்து விட்டதாகவும், இதனையடுத்து, சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட அவர்கள் ஐவரும் தலைநகர் கொழும்புவில் உள்ல இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இலங்கை அரசின் உயர் வட்டாரங்கள் இன்று மாலை தெரிவித்தன.

அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் உணமையாக இருக்கும்பட்சத்தில், விடுதலையான இந்த 5 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுடன் இந்தியத் தூதர் சந்திப்பு

 சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களையும், இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “5 பேரையும் விரைவில் தாயகத்துக்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை இந்தியத் தூதரகம் எடுத்து வருகிறது’ என்றார்.

குடியேற்றத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும், இந்தியத் தூதரகம் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டுவிட்டதாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவுக்கு திரும்புவதற்குத் தேவையான ஆவணங்கள் கொடுக்கப்பட்ட பிறகு, 5 பேரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நாடு திரும்புவார்கள் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் அங்கம் வகிக்கும், சார்க் எனப்படும் தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, நேபாளத்தில் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடியும், ராஜபட்சவும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், 5 தமிழக மீனவர்களையும் இலங்கை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary :

Sri Lanka has released 5 Tamilnadu fishermen who were convicted for smuggling drugs

Sri Lanka has released five Indians who were given the death sentence after being convicted for smuggling drugs into the country. All five convicts are fishermen from Tamil Nadu. India maintains they are innocent. Their sentence has been commuted by Sri Lankan President Mahinda Rajapakse and they have been handed over to Indian officials in Colombo, said sources in the Lankan government.  The five accused — Emerson, P Augustus, R Wilson, K Prasath and J Langlet — were sentenced to death last month by a court in Colombo.They were arrested in 2011. The Indian government had challenged the conviction in Sri Lanka’s Supreme Court  and over the weekend, Prime Minister Narendra Modi had phoned President Rajapakse about the controversy.  It was reportedly agreed that the fishermen would be transferred to an Indian prison. Their sentencing triggered large protests in Tamil Nadu, which says its fishermen are unfairly targeted and arrested by the Sri Lankan navy for allegedly trespassing into Lankan waters.

Related posts