சங்கராபுரம், 2013.மே.17-சங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் முனிசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளும் அடைக்கப்பட்டன. முனிசாமி சங்கராபுரம் பல்லவன் வங்கி சந்து பகுதியை சேர்ந்தவர். இவர் சங்கராபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் தற்சமயம் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வந்தார்.
மேலும் முனுசாமி ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கச்சிராயப்பாளையம் பகுதியில் கேபிளும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முனிசாமி சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே கட்சி அலுவலக கட்டிடம் கட்டி வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் முனிசாமி கட்டிட பணியை பார்வையிட்டு கொண்டு இருந்தபோது காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து தாக்கினர். உடனே அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முனிசாமி ஓடினார், எனினும் அந்த கொலை கும்பல் முனிசாமியை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முனிசாமி தலை மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். உடனே அந்த கொலை கும்பல் காரில் ஏறி தப்பி சென்றது. இந்த தகவல் அறிந்தவுடன் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் சம்பவம் பற்றி அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மனும் அங்கே சென்று விசாரணை மேற்கொண்டார். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் முனிசாமி ரியல் எஸ்டேட் வியாபார தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் முனுசாமியுடன் ஒன்றாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த ராமர் (41) என்பவருக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கலில் மன கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் வந்த லாப தொகையை ராமருக்கு முனிசாமி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனை ராமர் பலரிடம் கூறி முறையிட்டு வந்திருக்கிறார். இதனால் முனிசாமியை பழிவாங்காமல் விட மாட்டேன் என்று ராமர் சபதம் செய்து வந்ததாக தெரிகிறது. எனவே கூலிப்படையினரை வைத்து ராமர் முனிசாமியை கொலை செய்திருக்கலாம் என கருதுகிறார்கள். இதற்கிடையே ராமரை காவல்துறையினர் விசாரணைக்கு தேடியபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து ராமரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே முனிசாமி படுகொலை காரணமாக சங்கராபுரம் பகுதியில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.