வட சென்னை மக்கள் ஒரு வகை கொசுவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதாக சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.
ஏடிஸ், அனோபிலஸ் ஆகியவை கடித்தால் டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல், சிக்குன்குனியா என நோய்கள் பரவும்.
ஆனால் இந்த ‘ஆர்மிகெரஸ்’ கடித்தால் நோயெல்லாம் பரவாமல் வலி பின்னி எடுத்து விடுமாம்.
ஆர்மிகெரஸ் கொசுக்களால் வட சென்னை பகுதி பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளதாக இந்திய பொது சுகாதார அமைப்பின் தமிழக பிரிவின் புள்ளி்விவரத் தகவல் தெரிவிக்கிறது.
இவ்வகை கொசுக்கள் வட சென்னையின் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஓட்டேரி, மின்ட், புளியந்தோப்பு, வியாசர்பாடி, பட்டாளம், தண்டையார்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதிகளில் இந்த வகை கொசுக்கள் பெருமளவில் உலா வந்து கொண்டுள்ளனவாம்.
செப்டிக் டேங்குகள், குப்பைக் கூளங்கள், தேங்கிக் கிடக்கும் மழை நீர் போன்ற இடங்களில்தான் இவை உற்பத்தியாகின்றன. வட சென்னையில் இந்த வகை இடங்களுக்கும், சுகாதாரக் குறைபாட்டுக்கும் குறைவே இல்லை என்பதால் இந்த வகை கொசுக்கள் இங்குதான் அதிகம் உள்ளன.
மற்ற கொசுக்களை விட இவை உருவத்தில் பெரியவையாகும். ஆறு மில்லிமீட்டர் நீளமும், 500 முதல் 750 மீட்டர் உயரத்தில் பறக்கக் கூடியதாகவும் உள்ளன.
இந்த வகை கொசுக்கள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அதிக அளவில் தங்களது கடிக்கும் பணியை தீவிரமாக செய்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த வகை கொசுக்களால் வட சென்னை பகுதி மக்கள் வலியால் அவதிப்படுவதால் இவற்றை ஒழிக்க மாநகராட்சியும் சிறப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாம்.