தமிழக அரசின் இலவச திட்டத்துக்காக ஆந்திராவில் இருந்து வாங்கிய மாடுகளால்தான் கோமாரி நோய் பரவியதாக காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் பலியாகி உள்ளன.
இந்நிலையில் தமிழக அரசின் இலவச மாடு வழங்கும் திட்டத்தால்தான் கோமாரி நோய் பரவியதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து நாகை மாவட்ட காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் கோபி கணேசன் கூறுகையில், நாகை மாவட்டத்தில் கோமாரி நோயால் கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 3 ஆயிரம் மாடுகள் இறந்துள்ளன.
கிராம பொருளாதாரத்தை உயர்த்தவும், ஏழை, எளிய மக்களின் வருமானத்தை பெருக்கவும் அரசு விலையில்லா மாடுகளை வழங்கி உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாடுகளை கால்நடை மருத்துவரின் முன்னிலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அரசு ஆணையிட்டுள்ளது.
ஆனால் ஆந்திராவில் இருந்து கறவை மாடுகளை கொள்முதல் செய்யும்போது அவற்றின் மதிப்பு, நோய்த்தாக்கம், பால்திறன் ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் மாடுகளை கமிஷன் பெற்று கொள்முதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கு கூட தகுதி பெறாத கறவை மாடுகளை 30 ஆயிரத்திற்கும் மேல் விலை கொடுத்து கொள்முதல் செய்திருக்கிறார்கள்.
கால்நடை மருத்துவர்கள் விழிப்புடனும், நேர்மையுடனும் இல்லாத காரணத்தால் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்த அனைத்து விலையில்லா மாடுகளும் நோய்த்தாக்கத்திற்கு ஆளாகி உள்ளன.
இதனால் விலையில்லா மாடுகளின் மூலம் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த நோய், கிராமங்களில் ஏற்கனவே இருந்த மாடுகளுக்கும் தொற்றுநோய் பரப்பி அவைகளையும் உயிர் பலி வாங்கி உள்ளது.
இதற்காக அளிக்கப்பட்ட போலியான சிகிச்சையால் பல ஆயிரக்கணக் கான மாடுகள் இறந்து டெல்டா பகுதிகளில் பல கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் மர்மநோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.இறந்த ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் இழப்பீடாக தலா 30 ஆயிரமும், அதனை வளர்ப்பதற்கு 6 மாதம் ஆகும் என்பதால் 20 ஆயிரமும் சேர்த்து 50 ஆயிரம் வழங்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல் நாமக்கல்லில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கோமாரி நோய், தொற்றுநோய் போல பரவி வருகிறது.
பல மாவட்டங்களில் கால்நடைகள் இந்த நோய்க்கு பலியாகியுள்ளன. கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். கோமாரி நோயை முன் கூட்டியே தடுக்க அரசு தவறி விட்டது.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மாடுகளை விற்பனைக்கு வாங்குவதே, இந்த நோய் பரவ முக்கிய காரணமாகும். இந்த கோமாரி நோய் தாக்குதலால், தமிழகத்தில் தினமும் ஒரு லட்சம் லிட்டர் பால் உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 35 செலவாகிறது.
ஆனால் அரசு 20 மட்டுமே கொடுக்கிறது. எனவே பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று மாநில தலைவர் செங்கோட்டுவேல் கூறியுள்ளார்.