தூக்கு கயிற்றில் நிஜம் : ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்…: திருச்சி வேலுச்சாமியின் துணிவான எழுத்துக்கள்

Thooku kayittril Nijam Book written by Writer Trichy Veluswamy

Thooku kayittril Nijam Book written by Writer Trichy Veluswamy

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்…

எப்படி ஜோன் எப். கெனடி, சுவீடிஸ் பிரதமர் ஓலப்பால்மே, டயானா கொலை வழக்குகள் தீர்ந்து போகாத தகவல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றனவோ அதுபோலவே ராஜிவ்காந்தி கொலையும் தீர்ந்து போகாத பக்கங்களாக, தீராநதியாக தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தவகையில் திருச்சி வேலுச்சாமியால் எழுதப்பட்டு வெளியாகியுள்ள தூக்குக் கயிற்றில் நிஜமும் அருமையான ஓர் ஆவணமே. தொகுப்பாளர் ஏகலைவனும், நூலசிரியரும் பாராட்டுக்குரியவர்கள்.

அவர்கள் நூலில் கவனத்தைத் தொட்ட சில விடயங்கள்…

01. ஸ்ரீ பெரும்புத்தூரில் குண்டு வெடித்து ராஜீவ் கொல்லப்படுவதற்கு சுமார் 25 நிமிடங்களுக்கு முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கு நூலின் ஆசிரியர் திருச்சி வேலுச்சாமி போன் செய்கிறார். அப்போது சுவாமி கேட்கிறார்.. ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் இறந்துவிட்டாரா என்று.. மின்னல் வேகத்தில் பலரிடம் விசாரிக்கிறார் வேலுச்சாமி.. அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை… அதன் பின்தான் கொலையே நடக்கிறது… ஆகவே இந்தக் கொலை சுப்பிரமணிய சுவாமிக்கு முன்பே தெரிந்திருக்கிறது…

( இங்கு முக்கிய கேள்வி இப்படியொரு விடயத்தை சாமி அல்லாது வேறொருவர் சொல்லியிருப்பதாக சி.பி.ஐ கேள்விப்பட்டிருந்தால் அவர் கதி என்னவாகியிருக்கும்..? )

02. சம்பவம் நடைபெற்ற மே 21ம் திகதி டெல்கி செல்வதாக சொன்ன சுப்பிரமணிய சுவாமி அங்கு செல்லவில்லை. சென்னை அப்பலோ வைத்தியசாலைக்கு அருகில் இருந்த கோட்டல் சிந்தூரியில் சந்திராசுவாமி வேறு பேரில் அறைபோட்டு இருந்துள்ளார், அவரோடு சாமியும் இருந்துள்ளார். பின்னர் இருவரும் காரில் பெங்களுர் சென்று விமானமூலம் டெல்கி சென்றுள்ளனர்.

அன்று ஒரு நல்ல விடயம் நடக்கப்போகிறதென சந்திராசாமி லட்டு கொடுத்துள்ளார்.. பக்கம் 137 – 138

03. ஜெயின் கமிஷனே இரண்டு சாமிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. சந்திராசாமியின் பெயர் நேசமிந்த் சந்திராசாமி ஜெயின், அதுபோல ஜெயினின் பெயரும் மிலஸ் சந்த் ஜெயின்தான். பக்கம் 140

04. இந்தக் கொலைக்கும் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் தொடர்பிருக்கிறது, வேலுச்சாமிக்கு இதன் பொருட்டு அவர் 2.5 கோடி ரூபா இலஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளார். பக்கம் : 118

05. மல்லிகை சிறப்பு முகாமும் இவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது, அங்கு முக்கிய அதிகாரியாக வாழப்பாடியின் சம்மந்தி ராமலிங்கம் பணியாற்றினார். பக்கம் 186

06. விசாரணை தொடங்க முன்னரே புலிகளே கொலைக்குக் காரணம் என்று சுப்பிரமணிய சுவாமி அறிவிக்கிறார். அதே பாணியில் புலிகளையே குற்றவாளியாக்கும் ஒரே குறிக்கோளுடன் வழக்கை நகர்த்துகிறார் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் கையாளான சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன்.

07. தமிழ் உணர்வாளர்கள் என்று மேடைக்கு மேடை வீரம் பேசியோர் தாணுவை ஒரு கரும்புலி பெண் என்று போற்றிப் பேசினார்கள்.. அன்புத் தங்கை என்று அலறினார்கள்… பாடினார்கள்… இவர்களுடைய அறிவின் போதாமை காரணமாக புலிகளே வீண் பழியை சுமக்க, சுப்பிரமணிய சுவாமி தப்பிக்க வசதியாக இருந்தது.

கார்த்திகேயனின் வெற்றிக்கு வழிசமைத்ததில் கணிசமான பங்கு இப்படிப்பட்ட தூரப்பார்வையற்ற புலி உணர்வாளரையே சேரும் என்று வருத்தப்படுகிறார் வேலுச்சாமி.

Thooku kayittril Nijam Book written by Writer Trichy Veluswamy

08. நூலில் இரண்டு யாகங்கள் பற்றிய செய்தி வருகிறது :

அ. தற்கொலைக்குண்டு வைத்திருந்த தாணுவின் இடுப்பில் இருந்த வெடிகுண்டு பெல்ட் சந்திராசாமியின் யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டே அனுப்பப்பட்டது.

ஆ. ராஜீவ் இறந்த பிறகு பிராமணர் ஒருவரை கொன்றதற்கான பரிகாரம் செய்யும் யாகத்தை சுப்பிரமணிய சுவாமி நடாத்தினார்.

09. இப்போது தமீழீழ உணர்வாளராகியுள்ள கம்யூனிஸ்ட் தா. பாண்டியன் கதை.

சம்பவம் நடந்தபோது படுகாயமடைந்தவர் தா. பாண்டியன், இவர் முன்னிலையிலேயே ஜெயலலிதாவை பழிவாங்க சுப்பிரமணிய சுவாமி திட்டமிடுகிறார். ஜெயலலிதாவுக்கும் கொலைக்கும் தொடர்பிருப்பதாக ஜெயின் கமிஷனில் மனு கொடுக்கிறார் சாமி. பக்கம் 114

மேலும் ஜெயலலிதாவின் வக்கீல் வெங்கட்ராமன் அவரை பழிவாங்க சில ஆதாரங்களை கொடுக்கிறார், அதுதூன் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்காக 1996 ல் திமுகவால் பதியப்பட்டது.

இந்த ஆவணங்களை தா. பாண்டியனுடன் இணைந்தே தாக்கல் செய்தார் சாமி.. பெங்களுரில் நடக்கும் இந்த வழக்கிற்கு தா. பாண்டியனின் மூத்த மகன் மனோஜ் பாண்டியன் தலைமையிலேயே நடக்கிறது. பக்கம் 113

( சமீபத்தில் தா. பாண்டியனின் பிறந்த நாளுக்கு நேரடியாக ஜெயலலிதா சென்றது ஏனென்ற கேள்விக்கு நூலின் 113 ம் பக்கம் நல்ல பதிலாகப் பொருந்துகிறது. )

10. சோனியா காந்தியை டெல்லி ஜனபத் ரோட்டில் சந்திக்கிறார் வேலுச்சாமி.. அப்போது வேலுச்சாமியிடம் சோனியா கேட்ட கேள்வி :

இந்த விவகாரத்தை நீங்கள் கையில் எடுப்பதால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்பதை உணரவில்லையா.. தெரிந்தும் ஏன் இப்படி செயற்படுகிறீர்கள்.. பக்கம் 146

11. தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனும், டெலோ சிறீசபாரத்தினத்தின் சகோதரர் ஸ்ரீகாந்தாவும், இன்னொரு டெலோ பெண் போராளியும் சுப்பிரமணிய சுவாமியுடன் அடிக்கடி தொடர்பு வைத்திருந்தார்கள். ராஜீவ் கொலையின் பின் இவர்களின் பொருளாதாரம் உயர்ந்தது.

புலிகளால் அதிகாரம் இழந்த இவர்கள் ராஜீவ் கொலையே புலிகளை தோற்கடிக்கும் ஆயுதம் என்று கருதினார்களா.. என்று சந்தேகம் எழுப்புகிறார் வேலுச்சாமி.

12. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மரகதம் சந்திரசேகர் நல்ல ஆரோக்கியமாக இருந்தார்.. அவரைப் பார்க்கப்போனபோது ஒன்றும் இயலாதவர் போல நடித்து, நாடகமாடினார். பணத்துக்கு ஆசைப்பட்டு தவறிழைத்துவிட்டார் என்று இவரைப்பற்றி சாமி குறிப்பிட்டார் என்கிறார்.

ஸ்ரீ பெரும்புத்தூர் காட்டுக்குள் தேர்தல் கூட்டம் நடாத்த ஏற்பாடு செய்த குற்றம் மரகதம் சந்திரசேகரின் பின்னால் இருக்கிறது என்பது வேலுச்சாமி வாதம், அவருடைய மகனையும் சந்தேகிக்கிறார்.

இப்படி பல சூடான சம்பவங்கள் அந்த நூலில் உள்ளன.

படித்த பின் உள்ளத்தில் எழும் கேள்விகள் :

01. உயிர் நண்பர்களாக இருந்த திருச்சி வேலுச்சாமிக்கும், சுப்பிரமணிய சுவாமிக்கும் இடையில் இவ்வளவு பெரிய வெடிப்பு வர காரணமான விடயங்களில் மேலும் ஆழம் வேண்டும்.

02. இதுதான் உண்மையாக இருந்தால் இதுபோல ஆதாரங்களை வைத்து புலிகள் ஏன் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை உறுதியாக மறுக்கவில்லை..? தமது தரப்பில் விளக்க நூல் ஒன்றை ஏன் வெளியிடவில்லை..? பின்னர் பிரபாகரன், பாலசிங்கம் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் ” ராஜிவ் கொலை துரதிர்ஷ்டவசமானது ” என்று அவர்கள் அறிவிக்கக் காரணம் என்ன..? அவர்களுக்கும் அழுத்தம் இருந்ததா..? நூலில் தகவல் இல்லை.

03. இவருடைய வாதத்தை சோனியா நம்பியிருந்தால் புலிகள் மீதான போருக்கு 2009 ல் இந்தியா ஏன் பேராதரவு வழங்க வேண்டும்…? முரண்பாட்டுக்கு நூலில் விளக்கமில்லை.

இது குறித்து மேலும் பல நூல்களின் வரவுக்கு வெளி இருப்பதும் தெரிகிறது.

வேலுச்சாமியின் தேடுதல் தொடரப்பட வேண்டும் அடுத்த நூல்களும் வரவேண்டும்.

நல்ல, துணிச்சலான முயற்சி எந்தவொரு கொலை வழக்கிலும் இதுபோன்ற துணிச்சலான நூல் வந்ததில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

Thooku kayittril Nijam Book written by Writer Trichy Veluswamy

Meet the Best Divorce Attorney in Rajendra Family Court Law Firm in Chennai

Related posts