ஈரோட்டில் படுத்த படுக்கையாக இருந்த தனது அக்கா அவதிப்படுவதை பார்க்க சகிக்காத தம்பி அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். ஈரோடு காசிபாளையம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் வீதியில் வசித்தவர் பர்வதம்(75).
அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பர்வதத்துக்கு தமிழ்செல்வன், அமுதன், ராஜு ஆகிய மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். புஷ்பாவை பர்வதத்தின் தம்பி மூர்த்தி(70) தான் திருமணம் செய்து கொண்டார்.
பர்வதம் தனது தம்பியின் ஆதரவில் இருந்து வந்தார். முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பர்வதம் படுத்த படுக்கையாகிவிட்டார். அவர் அவதிப்படுவதைப் பார்க்க சகிக்காத மூர்த்தி அக்காவை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவரின் உடலை அருகில் உள்ள தனது தோட்டத்தில் புதைத்துவிட்டு தாலுகா போலீசில் மூர்த்தி சரணடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் பர்வதம் வீட்டுக்கு முன்பு நேற்று காலை குவிந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை பர்வதத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.