Property tax is must for koyambedu shops : chennai mayor saidai Duraisamy
கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்ட கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எம்.சி. முனுசாமி கேட்ட கேள்விக்கு மேயர் அளித்த பதில் விவரம்:
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கட்டடங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டி, தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த மார்க்கெட் வளாகத்தில் கடைகள் நடத்தும் 3,194 பேரில், 2,098 பேருக்கு சொத்து வரி விதிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 472 பேர் சொத்து வரியை தொடர்ந்து கட்டி வருகிறார்கள். 1,096 பேருக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை. கடை உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ.வுக்கு பராமரிப்புப் பணிகளுக்காக பணம் செலுத்தி வருகிறார்கள். சந்தை வளாகத்தில் மாநகராட்சியால் எந்த பராமரிப்புப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. சந்தையில் உள்ள கடைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தவுடன் சொத்து வரி மதிப்பீடு செய்திருக்கவேண்டும். ஆனால் வருவாய்த் துறை அதிகாரிகள் சொத்து மதிப்பீட்டையும் வரி வசூலையும் தொடர்ந்து செய்யவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து கடை உரிமையாளர்களிடமும் சொத்துவரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொத்து வரி வசூலிக்காததால் ஏற்பட்ட இழப்புத் தொகை முழுவதையும் திரும்பப் பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னையில் வணிக பயன்பாட்டுக்கு உள்ள கட்டடங்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கவோ, தளர்வு செய்யவோ சென்னை மாநகராட்சி சட்ட விதிகளில் வழிவகை இல்லை. இதனால் கோயம்பேடு கடைகளுக்கு சொத்துவரியில் இருந்து விலக்கு அளிக்கவோ தளர்வு செய்யவோ இயலாது என்றார் மேயர்.
Property tax is must for koyambedu shops : chennai mayor saidai Duraisamy
Property tax is must for koyambedu shops: chennai mayor saidai Duraisamy said yesterday strictly to develop the infrastructure of the complex which is one of the biggest in asia