New fee for Auto Rickshaw
தமிழகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. 1996,க்கு பிறகு கடந்த 2007 ஜனவரியில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆகவும் அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.15 எனவும் கட்டணம் நிர்ணயிக்க தொழிற்சங்கங்கள் கோரின.இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கடந்த 10ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில், தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போக்குவரத்து துறை ஆணையர் பிரபாகர ராவ், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்பட 9 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். குறைந்த பட்சமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணமும், அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதம் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆட்டோ கட்டணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்த உள்ளன. ஜி.பி.எஸ். கருவியுடன் டிஜிட்டல் மீட்டர் அரசு சார்பில் ஒவ்வொரு ஆட்டோவிற்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
புதிய ஆட்டோ கட்டணம் கடந்த 25-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் இடையே எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக புதிய கட்டண விவரம் அடங்கிய அட்டை வழங்கப்பட உள்ளது.இந்த அட்டையில் ஆட்டோ உரிமையாளர் போட்டோ ஒட்டப்படும், அவரிடம் மட்டுமே அட்டை வினியோகம் செய்யப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட்டு பெற வேண்டும்.
கட்டண அட்டையை பயணிகள் பார்வைக்கு தெரியும் வகையில் தொங்க விடவோ, ஒட்டவோ செய்ய வேண்டும். கட்டண அட்டை தயாராகி விட்டது. இன்று அல்லது நாளை முதல் வழங்கப்படும்.பழைய மீட்டரில் உள்ள கட்டணமும் இந்த அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. பழைய கட்டணப்படி கிலோ மீட்டருக்கு எவ்வளவு வருகிறதோ அதன் அடிப்படையில் புதிய கட்டணம் வசுலிக்கப்படும். அதனால் தான் அட்டையில் இரண்டு கட்டணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டணத்தை விட புதிய கட்டணம் கூடுதலாக இருக்கும். நாம் எத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்கிறோம் என்பதை அருகில் உள்ள புதிய கட்ட ணத்தோடு ஒப்பிட்டு வழங்க வேண்டும்.ஆட்டோக்களின் உரிமையாளர்களிடம் மட்டுமே கட்டண அட்டை கொடுப்பதால் அவர்களுக்கு அதன் முழு விவரங்கள் தெரிய வரும். டிரைவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு தரக் கூடாது என்பதற்காக இதை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிப்போம். இவ்வாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூரினர்.