6 year old boy kidnapped in Chennai
சென்னை கோயம்பேட்டில் சாக்குமூட்டையில் கட்டி பள்ளி மாணவனை கடத்த முயற்சித்தாக இளைஞர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் சேகர். இவர் அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சேகரின் மனைவி சித்ரா. இத் தம்பதியின் மகன் முகேஷ் (வயது 6). சின்மயாநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முகேஷ் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.முகேஷ் திங்கள்கிழமை இரவு சேமாத்தம்மன் நகர் 3வது தெருவில் வசிக்கும் சித்தப்பா பத்மநாபன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் முகேசுடன் பேச்சு கொடுத்து சாக்லேட் கொடுத்தாராம்.
அதை பெற்றுக் கொண்ட முகேஷ் சிரித்து பேசியபடி அந்த இளைஞருடன் சிறிது தூரம் நடந்து சென்றானாம். தெருமுனைக்கு சென்றதும் திடீரென அந்த இளைஞர், அங்கு கிடந்த சாக்கு பைக்குள் முகேசை தூக்கி போட்டு கட்டியதாக தெரிகிறது. பின்னர் அந்த சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு அந்த ஓடத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் பயந்து போன முகேஷ் கூச்சலிட்டான். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அப் பகுதி மக்கள், அந்த இளைஞரை விரட்டிச் சென்று பிடித்தனர்.பின்னர் அவர்கள், சாக்கு பையை திறந்து பார்த்தபோது, அதற்குள் சிறுவன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த இளைஞரை தாக்கினராம்.
தகவலறிந்த கோயம்பேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த இளைஞர்தாம்பரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தாமோதரன் (22) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில், அண்ணாநகர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், போதிய வருமானம் கிடைக்காததால் சிறுவனை கடத்தி சென்று பிச்சை எடுக்க வைக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஏற்கனவே சென்னையில் 2 இடங்களில் சிறுவர்களை கடத்த முயன்றதாகவும் அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாராம்.
இது தொடர்பாக போலீஸார் தாமோதரன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.தாமோதரனுடன் வேறு யாருக்கெல்லாம் இந்த கடத்தல் முயற்சியில் தொடர்பு இருக்கிறது என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 year old boy kidnapped in Chennai
Advertisement: REAL ESTATE
Real estate Consultants and Builders in chennai