Cuddalore District business tax officer Rajeswary arrested
கடலூரில் ஒன்றரை லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய மாவட்ட வணிக வரித் துறை அதிகாரி ராஜேஸ்வரி (40) லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் தேரடி தெருவில் சதீஷ்குமார் என்பவர் நிலக்கரி சாம்பலில் இருந்து செங்கல் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு கடலூர் மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி ராஜேஸ்வரி வந்து கணக்கு வழக்குகளை சரிபார்த்தார். அந்த நிறுவனத்துக்கு வரி குறைப்பு செய்திருப்பதாகவும், அதற்கு ரூ.8 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்றும் நிறுவன உரிமையாளர் சதீஷ்குமாரிடம் கேட்டார்.
அதற்கு அவர் முதல் தவணையாக ரூ. 1½ லட்சம் தருவதாக அதிகாரியிடம் கூறினார். பின்னர் வணிக வரித்துறை அதிகாரி அந்த பணத்தை நாளை காலை சிதம்பரம் தேரடி வீதிக்கு கொண்டு வந்து தரும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இது குறித்து நிறுவன உரிமையாளர் சதீஷ் குமார் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, இன்று மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் சதீஷ், திருமால், சண்முகம் உள்ளிட்ட காவல்துறையினர் அந்த நிறுவனத்துக்கு அருகே மறைந்திருந்தனர்.
அப்போது, ரூபாய் ஒன்றரை லட்சத்தை சதீஷ்குமார், அதிகாரி ராஜேஸ்வரியிடம் லஞ்சமாகக் கொடுத்த போது மறைந்திருந்த காவல்துறையினர், அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் இவ்வளவு அதிகமான தொகையை லஞ்சமாகக் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்துள்ளது இதுவே முதல் முறையாகும் .