DMK leader M.karunanidhi’s letter to prime minister
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தையும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தையும் அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரோ மூலம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், இந்திய வான்வெளி தொழில்நுட்ப நிலையம் துவங்கப்பட்டது. இந்நிலையில், வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை விஞ்ஞானிகள் பற்றாக்குறையை சமாளிக்க, வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தை அமைக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தை அமைக்க தேவையான நிலம் மற்றும் வசதிகள், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ளது. குறிப்பாக, வான்வெளி, திரவ உந்துவிசை, அதிவேக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கட்டுவதற்கு தேவையான தொழில்நுட்பம் இங்கு கிடைக்கும். எனவே, இக்கல்வி நிலையத்தை மகேந்திரகிரியில் அமைக்க வேண்டும்.
இதேபோல் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை நெல்லை மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அமைக்க வேண்டும். இப்பகுதி ராக்கெட் ஆய்வு நிறுவனங்களுக்கு அருகில் உள்ளது மேலும் பூகோளரீதியாகவும் ராக்கெட் ஏவுதளம் அமைக்க உரிய இடம். இங்கு திறன் வாய்ந்த பணியாளர்களும் இருக்கின்றனர்.தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இவ்விரு நிறுவனங்களையும் அமைப்பதன் மூலம் தொழில்வளர்ச்சி இல்லாத இம்மாவட்டங்கள் பயன்பெறும் . எனவே முன்னுரிமை அடிப்படையில் இப்பணிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு திரு.மு.கருணாநிதி கடிதம் எழுதி இருந்தார் .