முதல்வர் குறித்து அவதூறாக செய்தி ஒளிபரப்பியது தொடர்பாக கேப்டன் டிவி ஆசிரியர் உள்பட மூன்று பேர் மீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கேப்டன் டிவியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் குறித்து செய்தி ஒளிபரப்பானது. அதில், முதல்வர் குறித்தும், மக்கள் பணம் ரூ. 7.25 கோடியை தேவை இல்லாமல் செலவழிப்பதாகவும் செய்தி வெளியானது.
இந்த செய்தி ஆதாரம் இல்லாமலும், உறுதிப்படுத்தாமலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது, முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது என்று கூறி முதல்வர் சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞர் எம்.கே.அசோகன் ஆகிய இருவரும் கேப்டன் டிவி செய்தி வாசிப்பாளர் மைதிலி கண்ணன், செய்தி ஆசிரியர்கள் அரவிந்தன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குடன் சேர்த்து கேப்டன் டிவி ஊழியர்கள் மீது மொத்தம் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.