இயக்குநர் சேரன் மகள் தாமினியை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றின் தலைமையாசிரியர் பாதுகாப்பில் தங்கியிருக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேரன் மகள் தாமினி காதல் பிரச்சனையால் வீட்டிலிருந்து வெளியேறி தன் காதலன் சந்துருவுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில் தான் சந்துரு என்ற இளைஞரை காதலிப்பதாகவும், எனினும் தனது தந்தை சேரன் தங்கள் காதலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் சந்துரு நல்லவர் இல்லை என்றும் தனது மகளை அவர் நிர்பந்தப்படுத்தி தன் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார் என இந்த குற்றச்சாட்டினை சேரன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் தாமினியை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் காவல் துறையினர் தங்க வைத்தனர். இந்நிலையில் தாமினியை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறி சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் தாமினி, சேரன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளை நீதிபதிகளிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட்21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அதுவரை சரியான மற்றும் தாமினிக்கு விருப்பமான இடத்தில் அவர் தங்க வைக்கப்பட வேண்டும் என்பதால் இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் தாமினி தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ ஷ்ரைன் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் தாளாளரான திருமதி பி.கே.கே.பிள்ளையின் பாதுகாப்பில் தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் தாமினி தங்கியிருக்க வேண்டும்.
மேலும் அடுத்த விசாரணையின் போது தாமினி மற்றும் அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tamil Cinema director cheran daughter news