இலங்கை தமிழர் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

LETTER TO PRIME MINISTER MANMOHAN SINGH REGARDING SRILANKAN ISSUE CHIEF MINISTER JAYALALITHA

சென்னை, 15 – இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும் 13 வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்து விடாமல் தடுக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு இன்னமும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே அவர்கள் சிங்கள அரசின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போதும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். பல தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். அவரது மகனான பச்சிளம் பாலகனும் சிங்கள வெறித்தனமான அரசால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டான்.

இத்தனையும் செய்த இலங்கை அரசு தற்போது தமிழர்களுக்கு உள்ள உரிமைகளை பறிக்கவும் முயற்சி செய்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு உரிமை வழங்கும் 13 வது சட்ட திருத்தத்தையும் ரத்து செய்ய இலங்கை அரசு முயற்சிக்கிறது. இது தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமின்றி, தமிழக தலைவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளுமே மத்திய அரசை கண்டித்து வருகின்றன. இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்க கூடாது என்று மத்திய அரசை தமிழக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும் 13 வது சட்ட திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்து விடாமல் தடுக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். இலங்கை தமிழர்களின் எதிர்காலமே இந்த 13 வது சட்ட திருத்தத்தில்தான் உள்ளது. ஆனால் இலங்கை அரசு அதை ரத்து செய்ய சூழ்ச்சி செய்கிறது. இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது தமிழ் மக்களிடையே எழுந்த கோபத்தையும் வேதனையையும் குறிப்பிட்டு நான் பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளேன். சர்வதேச சமூகமும் இந்த மனித மீறலை கண்டித்தது என்றும் முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். ஆனால் அத்தகைய ஒரு சூழ்நிலை இலங்கையில் காணப்படவில்லை. கடந்த மார்ச் 27 ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழீழம் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதையும் முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்படி நடத்தப்பட்டால்தான் தமிழர்களின் லட்சியம் நிறைவேறும். 13 வது சட்டத் திருத்தத்தின் மூலம்தான் இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரபகிர்வு கிடைக்கும். சிறுபான்மை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது பற்றியோ, மீள்குடியேற்றம் செய்வது பற்றியோ இலங்கை அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. எனவே நாங்கள் தெரிவித்த அச்சம் உண்மையாகி விட்டது என்றும் முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார். இதனிடையே செப்டம்பர் மாதம் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 13 வது சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிங்களர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை கோத்தபய ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் நியாயப்படுத்தி பேசுகிறார்கள் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும். சம உரிமையோடு அவர்கள் வாழ வேண்டும். இந்த விஷயத்தில் சர்வதேச உடன்பாட்டை பின்பற்றாமல் பழைய நிலைக்கு செல்ல இலங்கை அரசு முயல்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டது இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு ஒரு பின்னடைவாகும். எனவே இந்த பிரச்சினையில் இந்தியா இனியும் வேடிக்கை பார்க்க கூடாது என்றும் முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போருக்கு பிறகு இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்ப்பு செய்வதில் இந்திய அரசுக்கு பொறுப்பு உள்ளது. ஆனால் சிங்கள அரசு நயவஞ்சகத்துடன் செயல்படுகிறது. மீண்டும் தமிழர்களை அடிமைப்படுத்தும் சூழலை சிங்கள ராணுவம் உருவாக்குகிறது. சர்வதேச நாடுகளின் உணர்வுகளை மதிக்காமல் மீண்டும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடக்கின்றன. இலங்கை அரசின் செயல்களால் தமிழக கடலோர பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தனி ஈழம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்த நான் விரும்புகிறேன். தமிழர்களுக்கு குறைந்தபட்ச உரிமையை கூட வழங்க இலங்கை அரசு மறுக்கிறது. எனவே இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும் 13 வது சட்ட திருத்தத்தை நீர்த்துப்போக செய்ய விடாமல் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வை உறுதிப்படுத்த வேண்டும். 13 வது சட்ட திருத்தத்திற்கு எந்த அபாயமும் ஏற்பட கூடாது. இதன் மூலம் மட்டும்தான் தமிழர்கள் சட்டரீதியாக உரிமை பெற வழிவகை ஏற்படும். எனவே சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தாம் நம்புவதாக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LETTER TO PRIME MINSTER MANMOHAN SINGH REGARDING SRILANKAN ISSUE CHIEF MINISTER JAYALALITHA

Related posts

Comments are closed.