மதுரையில் இருந்து தினமும் காலை 6.55 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் வழக்கம் போல் புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் காலை 8.55 மணிக்கு திருச்சி வந்து 9 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் காலை 8.45 மணிக்கு சென்னையில் உள்ள ரயில்வே உயர் அதிகாரி ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘திருச்சியில் இருந்து பேசுகிறேன். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. 9 மணிக்கு வெடிக்கும்’ என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இச்செய்தி உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 8.55 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்ததுஉடனடியாக அனைத்து பயணிகளையும் கீழே இறங்கும்படி போலீசார் கூறினர். இதற்கிடையே பயணிகளுக்கு வெடிகுண்டு பற்றிய தகவல் தெரியவந்தது. டிஎஸ்பி ராஜவேல் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் இன்ஜின் முதல் கடைசி பெட்டி வரை சோதனையிட்டனர். மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை .
இந்த தவறுதலான செய்தியை யார் தொலைபேசியில் தெரிவித்தார் என்பதை போலிசார் கண்டு பிடித்தனர் . போலீசார் துப்பு துலக்கியதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருச்சியை சேர்ந்த நாகராஜன் என்பது தெரியவந்தது. அவரை போலிசார் தேடுகின்டனர். ரயிலில் வெடிகுண்டு ஏதும் இல்லை என உறுதி செய்த பின்னர் வைகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றுள்ளது. காலை 9 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், சுமார் 2 மணிநேரம் தாமதமாக 10.50 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளாகினர்