தமிழக மக்கள் தொகை 7கோடியை தாண்டியது-சென்னை முதலிடம்

Tamilnadu Population 2013

தமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டி உள்ளது என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தமிழ்நாடு பிரிவு இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து கிருஷ்ணாராவ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்களும், 19 ஆயிரம் மேற்பார்வையாளர்களும் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 பேர் ஆண்கள், 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 பேர் பெண்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் (2001-2011) தமிழகத்தில் மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்துள்ளது. கிராமங்களில் 23 லட்சமும், நகரங்களில் 74 லட்சமும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையில் முதல் இடத்தில் சென்னை மாவட்டமும் (46,46,732 பேர்), 2வது இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டமும் (39,98,252 பேர்), 3வது இடத்தில் வேலூர் மாவட்டமும் (39,36,331 பேர்) உள்ளது. மக்கள் தொகை குறைந்த மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 5,65,223 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சியானது 15.6 சதவீதமாக பதிவாகி உள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 555 மக்கள் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த 2001ம் ஆண்டின் மக்கள் தொகை அடர்த்தியை விட 75 புள்ளிகள் அதிகம். இவ்வாறு கிருஷ்ணாராவ் தெரிவித்தார். முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலை, பிஐபி இணை இயக்குனர் பிரசாத் வெளியிட்டார்.

 Tamilnadu Population 2013

 

Related posts