Duplicate forgery Birth certificate of Arvind Kejriwal stating his birth place as Madurai
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் போலி பிறப்பு சான்றிதழ்
மதுரையில் பிறந்ததாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போலியாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில் சில வழக்கறிஞர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து ஓர் மனுவை அளித்தார்கள். மாநகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்கள்.
மேலும் மதுரையில் பிறந்ததாக டெல்லி முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் மாநகராட்சியினர் போலி பிறப்பு சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள். அந்த மோசடி போலி பிறப்பு சான்றிதழையும் கலெக்டரிடம் வழங்கினர்.
அது குறித்து வழக்கறிஞர்கள் பேசும் போது, கடந்த புதன்கிழமை இந்த போலி பிறப்பு சான்றிதழை, மாவட்ட கோர்ட்டில் இருக்கும் எங்கள் அறையில் அடையாளம் தெரியாத நபர் யாரோ போட்டு விட்டுச் சென்று விட்டார்கள். ஆகவே இதனை மோசடிகளை தவிர்க்க நாங்கள் கலெக்டரிடம் இதை வழங்கினோம் என்றார்கள்.
அந்த மோசடி பிறப்பு சான்றிதழில் கடந்த 27.12.1970 அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்ததாகவும், அவர் தந்தையின் பெயர் ராம்ஜி ராவ் கெய்க்வாட், தாயார்திருமதி கீதா தேவி எனவும், அவர் பிறந்த போது பெற்றோர்கள் வசித்த வீட்டு முகவரி இலக்கம் : 27, கற்பக நகர், கோ.புதூர்௬25007 எனவும் குறிப்பிடப்பிட்டிருந்தது. நிரந்தர முகவரி என ராம்வர்மா நகர், புதுடெல்லி எனவும் உள்ளது.
07.03.2012 அன்று இந்த சான்றிதழ் பதிவு செய்யப்பட்டதாகவும், 2013, மே 20ம் தேதி இதை வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் எந்த அதிகாரியின் கையெழுத்தும் இந்த போலி பிறப்பு சான்றிதழில் இல்லை. இதே போல பிறப்பு சான்றிதழுக்கு மாநகராட்சி பயன்படுத்தும் முத்திரை இல்லாமல், போலியான வேறொரு முத்திரை இருக்கிறது.
இந்த விவகாரம் பற்றி இதற்கிடையில் அறிந்த மாநகராட்சி கமிஷனர் திரு.கிரண்குராலா உடனடி விசாரணை செய்ய ஆணையிட்டார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், அந்த போலி சான்றிதழ் மதுரை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. எனினும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில் மாநகராட்சியில் எந்த வித பதிவும் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இது பற்றி ஒரு மாநகராட்சி அதிகாரி கூறியதாவது, ‘‘மதுரையில் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்ததாக மாநகராட்சியில் எந்த ஒரு பதிவும் இல்லை. எனினும் மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக சில சமூக விரோதிகள் இந்த மோசடி போலி சான்றிதழை தயார் செய்துள்ளனர்’’ என்றார்.