Tamilnadu breakfast is best in the world
தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சமீப காலமாக இந்தியாவில் மக்களிடையே ஆரோக்கியம் குறித்த கவனம் அதிகரித்து வருகிறது; இந்த ஆய்வு மக்களின் உணவு பழக்கத்தை பிரதிபலிப்பதற்காக அல்ல; உணவில் குறிப்பாக காலை உணவில் நாம் சாப்பிடும் முறை மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கானதாகும்; உணவு தொடர்பாக நடத்தப்பட்ட ஏராளமான ஆய்வில் அதிகப்படியாக மக்கள் காலை உணவை தவிர்ப்பதும், உணவு சாப்பிட்டாலும் குறைந்த அளவு சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது; தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் கோல்கட்டாவின் பாரம்பரிய காலை உணவில் மைதா அதிக சேர்க்கப்படுகிறது; இதில் கார்போஹைட்ரேட்கள் அதிகம்; மிகக் குறைந்த அளவே புரோட்டீன் சேர்க்கப்படுகிறது; நார்சத்து கிடையாது; டில்லி உணவில் எண்ணெய் மிகவும் அதிகம்; மும்பையில் முறையற்ற உணவு சாப்பிடப்படுகிறது; இங்குள்ளவர்கள் வெறும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்த ரொட்டிகளை சாப்பிடுகிறார்கள். இவ்வாறு மும்பை நிர்மலா நிகேதன் அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சித்துறை இயக்குனர் மாலதி சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் 79 சதவீதம் மக்கள் போதிய சத்துக்கள் அற்ற உணவுகளை சாப்பிடுகின்றனர். டில்லியில் 76 சதவீதம் பேரும், கோல்கட்டாவில் 75 சதவீதம் பேரும் சத்துக்கள் இல்லாத உணவை சாப்பிடுகிறார்கள். சென்னையில் 60 சதவீதம் பேர் மட்டுமே போதிய சத்துக்கள் இல்லாத உணவை சாப்பிடுகிறார்களாம். மற்றவர்களை விட தென்னிந்திய கிராமப்புறங்களில் வாசிப்பவர்களின் உணவில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அவர்கள் ராகியை அதிகம் பயன்படுத்துவதால் அதில் வைட்டமின் பி, நார்சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருப்பதாக மெட்ராஸ் மருதஅதுவ கல்லூரியின் உணவு கட்டுப்பாட்டு நிபுணர் மீனாட்சி பஜாஜ் தெரிவித்துள்ளார். பிரபலமான இட்லி, சாம்பார் தான் அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கிய முழுமையான உணவு எனவும் மீனாட்சி தெரிவித்துள்ளார்.
இட்லியில் உள்ள அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு உணவில் முழுமையான சத்துக்களை அளிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பாரில் உள்ள காய்கறிகள் மற்றும் பருப்பு சரிவிகித அளவில் சேர்க்கப்படுவதால் சத்துக்கள் அதிகம் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் காலை உணவை தவிர்கின்றனர். ஆனால் சென்னையில் காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகவும் குறைவு. சத்துக்கள் குறைவான உணவை சாப்பிடுபவர்களும் சென்னையில் குறைவு. சென்னையில் 50 சதவீதம் குடும்ப பெண்களும், 30 சதவீதம் வயதானவர்களும், 20 சதவீதம் வேலைக்கு செல்பவர்களும் காலை உணவாக ஆற்றல் தரும் பானங்களை மட்டுமே உட்கொள்கின்றனர்.
நன்றி: தினமலர்
Tamilnadu breakfast – Idli & Sambar, the best healthy food in the world. According to a survey, compared to other cities such as Kolkata, mumbai, bangalore, Hyderabad, pune, and Delhi, The most hygienic and healthy break fast habits are practised by Chennai people in india.