அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறை தான்: ராமதாஸ் அறிக்கை

Dr.Ramadass blames aiadmk Government

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறை தான் என்று கூறும் அளவுக்கு தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அரசுக்கு எதிராக எவரும் குரல் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அடுக்கடுக்கான அடக்கு முறைகளை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட 144 தடையாணை, இடையில் சில பகுதிகளில், சில வாரங்கள் தளர்த்தப்பட்டதை தவிர, 10 மாதங்களாக நீடிக்கிறது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட 144 தடையாணையும், இடையில் சில நாட்கள் தளர்த்தப்பட்டதைத் தவிர, இதுவரை விலக்கிக்கொள்ளப்படவில்லை.

இதனால், இம்மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சியாளர்களின் தவறுகளை கண்டித்து குரல் கொடுப்பது தான் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கடமையாகும். ஆனால், இந்தக் கடமையைக் கூட செய்யவிடாமல் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் செயலில் அரசு ஈடுபட்டிருக்கிறது. 144 தடை உத்தரவு என்பது அரிதிலும் அரிதாக பிறப்பிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த தடையாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களாக 144 தடையாணை நீடிப்பது வரலாறு காணாத அடக்குமுறை ஆகும்.

குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அடக்குமுறை எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் 19(1)ஆவது பிரிவின்படி இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் சுதந்திரமாக செல்வதற்கும், மக்களைத் திரட்டி கூட்டங்களை நடத்தவும் அனுமதி அளிக்கப் பட்டிருக்கும் போதிலும், அதையெல்லாம் மதிக்காமல் மதுரை, இராமநாதபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்குள் நுழைய எனக்கு தடை விதிக்கப்பட்டது. மரக்காணம் கலவரத்தில் அப்பாவி வன்னியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்தச் சென்ற என்னையும், பாட்டாளி மக்கள் கட்சியின் மற்ற தலைவர்களையும் காவல்துறை கைது செய்தது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய 8000 தொண்டர்களை சிறைகளில் அடைத்ததுடன், 123 பேரை குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததன் மூலம் அ.தி.மு.க. அரசு ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி காலால் உதைத்திருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, அண்மையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நடந்த சிறு நிகழ்வில் சம்பந்தமே இல்லாத முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு மீது பொய் வழக்குப் பதிவு செய்து தமிழக முதலமைச்சரை காவல்துறையினர் மகிழ்ச்சிப் படுத்தியுள்ளனர்.

மற்ற கட்சிகளும் தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு தப்பவில்லை. ஜனநாயக முறையில் அறப் போராட்டங்களை நடத்தவும், பொதுக் கூட்டங்களை நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. பல நேரங்களில் உயர்நீதிமன்றத்திற்கு சென்று தான் பொதுக் கூட்டங்களுக்கே அனுமதி பெற வேண்டியிருக்கிறது. மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டம் கைவிடப் பட்டதை எதிர்த்து இன்று போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கூட கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தலைவா திரைப்படத்தை வெளியிடுவதற்கு முட்டுக்கட்டை போடப்படுவதை எதிர்த்து நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் அடக்குமுறை உச்சகட்டத்திற்கு சென்றிருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொள்ளைகளை தடுக்கவும் உருவாக்கப்பட்ட காவல்துறை முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும், அவர்களின் கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்குகள் தொடரப்படுவதன் மூலம் மறைமுக மிரட்டல்கள் விடப்படுகின்றன. ஆளுங்கட்சியின் புகழ் பாடாத ஊடகங்களுக்கு அரசு விளம்பரம் மறுக்கப்படுகிறது.

அதேநேரத்தில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக சட்டம் வளைக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் குடியரசு நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.க.வினர் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த விதிவிலக்காக அனுமதி தரப்பட்டது. அதேபோல், என்.எல்.சி. பங்கு விற்பனையை எதிர்த்து அ.தி.மு.க. போராட்டம் நடத்த வசதியாக விழுப்புரம் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடையாணை கடந்த ஜூலை மாதத்தில் சில நாட்களுக்கு தளர்த்தப்பட்டது. அதேபோல் அ.தி.மு.க. ஆதரவுக் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கும் தடையின்றி அனுமதி தரப்படுகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்ட அரசுகள் அனைத்தும் கடந்த காலங்களில் மக்களால் தண்டிக்கப்பட்டிருக்கின்றன. இதை உணர்ந்தாவது அடக்குமுறைகளை கைவிடுவதுடன், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள 144 தடையாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 Dr.Ramadass blames aiadmk Government

Related posts