New Tamilnadu ministers of aiadmk Government
ஜூன்.18, சென்னை: தமிழக அமைச்சரவையில் சி.த.செல்லபாண்டியன் மற்றும் ஏ.முகமது ஜான் இருவரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். மேலும் எஸ்.பி.சண்முகநாதன், மற்றும் எஸ்.அப்துல் ரகீம் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து ஆளுநர் அலுவலக மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின் வருமாறு:-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ஏ.முகமது ஜான் மற்றும் தொழிலாளர் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், ஆகியோர் தமிழக அமைச்சரவரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நீக்கப்பட்ட (இடமிருந்து) சி.த.செல்லபாண்டியன், ஏ.முகம்மது ஜான் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள (இடமிருந்து) எஸ்.பி.சண்முகநாதன், அப்துல் ரஹீம்.ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், ஆவடி தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழக துறை பொறுப்பை எஸ்.பி.சண்முகநாதன் வகிப்பார். அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் பட்டியல் மரபினர் அயல்நாடு வாழ் இந்தியர்கள் அகதிகள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக எஸ்.அப்துல் ரகீம் பொறுப்பு வகிப்பார். இவர் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார். புதியதாக நியமிக்கப்பட்டுள்ள இரு அமைச்சர்களும் இன்று மாலை 4.40 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் காரணமாக சில இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் கே.டி.பச்சமாலுக்கு தொழிலாளர், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி செய்திதாள் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் செந்தூர் பாண்டியனுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு காட்டிலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆளுநர் மாளிகையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.