பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு வலுத்து வருகிறது, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .
அத்தோடு பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகவும் முடிவு செய்துள்ளது. அவ்வாறு விலகினால் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கும் அளிக்கும் ஆதரவை பா.ஜனதா விலக்கிக் கொள்ளும்.
இருந்தும் கூட்டணியை இழக்க மனமில்லாத பா.ஜனதா, நிதிஷ் குமாரை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரை அத்வானி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மோடி பிரச்சாரக்குழு தலைவராக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார், பிரதமர் வேட்பாளராக அவரை நியமிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் நிதிஷ்குமார் சமாதானம் அடையவில்லை. இருந்தாலும் எந்த வெறுப்பையும் நேரடியாகக் காட்டிக் கொள்ளாமல் இருந்த நிதிஷ்குமார், முதல் முறையாக பா.ஜனதா கட்சியுடனான உறவு நன்றாக இல்லை என்று கூறியுள்ளார்.
“பா.ஜனதா கட்சி எனக்கு இடையூறு செய்து வருகிறது. பா.ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் உறவில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சி சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் உள்ளது. தற்போது நிலைமை மோசமாகிவிட்டது. கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது” என்று நிதிஷ் குமார் கூறினார்.
இதற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத்யாதவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.