திருத்தணி செவ்வாய் 16ஏப்ரல் 2013 : நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, மோசடி ஆவணங்கள் தயாரித்து தாக்கல் செய்து கோர்ட்டை ஏமாற்றி ஜாமின் பெற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். இவர் எங்கே இருக்கிறார் என தேடி வந்த போலீசாருக்கு ஆந்திராவில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்த எம்.எல்.ஏ.,வை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நீதி மன்றத்தை ஏமாற்றிய தே.மு.தி.க., எம்.எல்.ஏ., புழல் சிறையில் அடைப்பு .,
கடந்த 8 நாட்களாக தலைமறைவாக இருந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை மாவட்ட எஸ்.பி., ரூபேஸ்குமார் டி.எஸ்.பி., பாலச்சந்தர், ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் கங்காதரன், ஏகாம்பரம் ஆகியோரை கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இவரை பிடிக்க வீடுகள் மற்றும் அலுவலகம், உறவினர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில் பள்ளிப்பட்டு அருகே இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போது அவர் இங்கும் இல்லை. இந்நிலையில் ஆந்திர மாநிலம் மந்திராலயாவில் ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்த எம்.எல்.ஏ., அருண் சுப்ரமணியத்தை போலீசார் கைது செய்தனர். இன்று தமிழகம் – திருவள்ளூருக்கு அழைத்து வரப்பட்ட அருண் சுப்ரமணியன், முதலாவது, ஜே.எம்.கோர்ட் மாஜிஸ்திரேட், அகிலா முன் ஆஜர்படுத்தப்பட்டு, பின், புழல் சிறையில் அடைக்க பட்டார்.